2017-07-03 16:11:00

குழந்தை Charlie Gardன் பெற்றோருடன் திருத்தந்தை ஒருமைப்பாடு


ஜூலை.03,2017. சுவாசப் பிரச்சனையாலும், மேலும் பல குணமாக்க முடியாத பிரச்சனைகளாலும் துன்புறும், இங்கிலாந்தைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை, Charlie Gardக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கி, அக்குழந்தையை காப்பாற்ற விரும்பும் அக்குழந்தையின் பெற்றோர் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும் என தன் ஆவலை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த செய்தியை இஞ்ஞாயிறன்று மாலை வெளியிட்டு பேசிய திருப்பீடத்தின் தகவல் தொடர்பு அதிகாரி Greg Burke அவர்கள், இச்சிறுவன் குறித்த செய்திகளை, திருத்தந்தை, பாசத்தோடும், அதேவேளை, கவலையோடும், மிக உன்னிப்பாக தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அக்குழந்தையின் பெற்றோருக்கு, தான் அருகாமையில் இருப்பதைத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.

அக்குழந்தைக்கு அருகாமையில் இருந்து அக்குழந்தைக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கவிழையும் பெற்றோரின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என தான் இறைஞ்சுவதாகவும் திருத்தந்தை கூறியுள்ளதாக திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரி Burke அவர்கள், மேலும் கூறினார்.

இங்கிலாந்தின் மேற்கு இலண்டனைச் சேர்ந்த தம்பதியருக்குப் பிறந்த Charlie Gardஎன்ற குழந்தை, சுவாசப் பிரச்சனைகளாலும், தசை இறுக்க நோயாலும் துன்புறும் வேளையில், அக்குழந்தையை தங்கள் சொந்த செலவில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எடுத்துச் சென்று,  சிகிச்சை அளிக்க பெற்றோர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, இங்கிலாந்து நீதிமன்றமும், தற்போது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் தடைவிதித்துள்ளன.

குணமாக்க முடியாத நோயுடைய இக்குழந்தையின் வாழ்நாளை, சிகிச்சை என்ற பெயரில் நீட்டித்து வைப்பது, குழந்தையின் வேதனையை அதிகரிக்க மட்டுமே செய்யும் என, நீதிமன்றங்கள் காரணம் கூறியுள்ளன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.