2017-07-01 15:11:00

விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்திற்கு புதிய தலைவர்


ஜூலை,01,2017. விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய, கர்தினால் Gerhard Ludwig Müller அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பேராயத்தின் புதிய தலைவராக, இயேசு சபை பேராயர், Luis Francisco Ladaria Ferrer அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

பேராயர் Luis Francisco Ladaria Ferrer அவர்கள், 2008ம் ஆண்டிலிருந்து விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

இஸ்பெயின் நாட்டின் Majorca தீவில், Manacor என்ற ஊரில், 1944ம் ஆண்டில் பிறந்த பேராயர், Luis Ladaria அவர்கள், 1966ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்து, 1973ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், 1975ம் ஆண்டில், இறையியலில் முனைவர் பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர், ஆயர்கள் பேராய ஆலோசகர் குழுவிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை ஆலோசனைக் குழுவிலும், புனித பத்தாம் பயஸ் குழுவோடு உரையாடல் நடத்தும் திருப்பீடக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

2012ம் ஆண்டில், விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக நியமிக்கப்பட்ட  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கர்தினால் Gerhard Ludwig Müller அவர்கள், "Ecclesia Dei" பாப்பிறை கழகம், பாப்பிறை விவிலியக் கழகம், பன்னாட்டு இறையியல் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.