2017-07-01 15:56:00

ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள்


ஜூலை,01,2017. இந்தியாவில், ஜூன் 30, இவ்வெள்ளி நள்ளிரவிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிமுறையால், எதிர்காலத்தில் மருந்துகளின் விலை உயரும் என ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என அழைக்கப்படும், புதிய சரக்கு மற்றும் சேவை வரியானது, நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளவேளை, இந்தப் புதிய ஜி.எஸ்.டியால், மருந்துகளின் விலை ஏறக்குறைய 2.3 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கும் என்று, இந்திய மருந்து உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (ஐ.டி.எம்.ஏ) தலைவர் தாரா படேல் அவர்கள் சொல்லியுள்ளார்.

விலை உயரும் மருந்துகளில், பல உயிர்காக்கும் மருந்துகளும் அடங்கும். இருந்தபோதிலும், இன்சுலின் உட்பட சில உயிர்காக்கும் மருந்துகளுக்கான வரி, ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது எனவும், தாரா படேல் அவர்கள் கூறியிருக்கிறார்.

ஐ.டி.எம்.ஏ செய்திருக்கும் முடிவின்படி, அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரியை மருந்து நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் எனவும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் அதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டன எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.