2017-07-01 15:33:00

ஒரே பாலினத் திருமணச் சட்டத்திற்கு ஜெர்மன் ஆயர்கள் கவலை


ஜூலை,01,2017. ஒரே பாலினத் திருமணத்தை, சட்டப்படி அங்கீகரிப்பதற்கு ஆதரவாக, ஜெர்மன் நாடாளுமன்றம் வாக்களித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இந்நடவடிக்கை, திருமணத்தின் அடிப்படைக் கூறுகளைக் கைநெகிழ்ந்துள்ளது என, அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறியுள்ளார்.

ஜூன் 30, இவ்வெள்ளியன்று, ஜெர்மன் நாடாளுமன்றம், ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த, ஜெர்மன் ஆயர் பேரவையின் திருமணம் மற்றும், குடும்ப ஆணைக் குழுவின் தலைவரும், பெர்லின் பேராயருமான, Heiner Koch அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஜெர்மன் அரசியலமைப்பை உருவாக்கிய தந்தையர், திருமணத்திற்கு, எத்தகைய பெருமைமிகு இடத்தைக் கொடுத்திருந்தனர் என்பது குறித்தும் விளக்கியுள்ளார் பேராயர் Koch. ஜெர்மனியின் திருமணச் சட்டத்தில், ஒரே பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில், சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடாளுமன்றத்தினர், திருமணத்தின் இன்றியமையாத கூறுகளைப் புறக்கணித்து விட்டனர் என்று கூறியுள்ளார், பேராயர் Koch.

நாடாளுமன்றத்தின் இந்த ஒப்புதல்படி, ஒரே பாலினத் தம்பதியர், இருபால் திருமணத் தம்பதியருக்கு உள்ள உரிமைகளைப் பெறுவார்கள் மற்றும், இது, ஒரே பாலினத் தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.