2017-07-01 15:25:00

திருத்தந்தையின் பாசமுள்ள ஆதரவுக்கு தென் சூடான் நன்றி


ஜூலை,01,2017.  ஆயுத மோதல்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள, தென் சூடான் மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் பாசத்திற்கும், ஆதரவுக்கும், அந்நாட்டு ஆயர்கள் சார்பில், நன்றி தெரிவித்துள்ளார், தென் சூடான் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர், Edward Hiiboro Kussala.

தென் சூடானின் தற்போதைய சூழலால், அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலா நிலையில், ‘தென் சூடானுக்குத் திருத்தந்தை’ என்ற பெயரில், கடந்த ஜூன் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டுக்கு உதவிகள் வழங்கியுள்ளார்.

தென் சூடான் மக்கள் மீது, திருத்தந்தை காட்டிவரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள ஆயர், Kussala அவர்கள், திருத்தந்தை வழங்கியுள்ள, ஐந்து இலட்சம் டாலர் நிதியுதவியைப் பெறுவதில் தாங்கள் மிகவும் மகிழ்வதாகவும், இந்த ஆப்ரிக்க நாட்டிற்கு, திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது பற்றி மீண்டும் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் வழியாக, தென் சூடானுக்குத் திருத்தந்தையின் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

தென் சூடானில், ஏறக்குறைய இருபது இலட்சம் பேர், பசியினால் வாடுகின்றனர் என, ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.