2017-06-30 15:03:00

இலங்கை புலம்பெயர்ந்தவர்களுக்கு ஓட்டுரிமை கேட்டு..


ஜூன்,30,2017. புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வேலைசெய்யும் இலங்கை மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுவதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமென, தலத்திருஅவை உட்பட, உரிமை ஆர்வலர்கள், இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நடவடிக்கை குறித்துப் பேசிய, கண்டி மனித உரிமைகள் அலுவலகப் பொறுப்பாளர், அருள்பணி Nandana Manatunga அவர்கள், நிலையற்ற அரசியல் மற்றும், கடினமான பொருளாதாரச் சூழலால், பெரும்பாலான மக்கள், வெளிநாடுகளில் உள்ளனர் என்றும்,  இவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வெளி நாடுகளில் வேலை செய்யும் இலங்கையின் 17 இலட்சம் மக்களுக்கு, ஓட்டுரிமை வழங்கப்படுவது குறித்த வழிகளை ஆய்வு செய்வதற்கென, 2016ம் ஆண்டில், இலங்கை நாடாளுமன்றம் ஒரு குழுவை நியமித்தது. ஆயினும், இந்தக் குழு இன்னும் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லையென UCA செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் நியமித்த இக்குழு, விரைவில் தன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தேர்தல் காலங்களில் ஓட்டளிக்கவும் வழியமைக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார், அருள்பணி Manatunga.

அரசு, இந்த விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார், இலங்கை, மியான்மார் மற்றும், தாய்லாந்து நாடுகளில் தேர்தல் காலங்களில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ள, அருள்பணி Manatunga.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.