2017-06-29 15:12:00

புதிய கர்தினால்களை, சிலுவை சுமக்க, இயேசு அழைக்கிறார்


ஜூன்,29,2017. "இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற்கு 10: 32-45) என்று நாம் வாசித்த நற்செய்தியின் சொற்கள், இன்று கர்தினால்களாக புதிதாக உருவாக்கப்படும் இந்த நிகழ்வுக்குப் பின்னணியாக விளங்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 28, இப்புதன் மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஐந்து புதிய கர்தினால்களுக்கு மோதிரம், தொப்பி மற்றும் பட்டம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, அவ்வேளையில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

எருசலேமுக்கு தான் செல்லவேண்டும் என்பதையும், அங்கு துன்பங்களைத் தாங்கவேண்டும் என்பதையும், இயேசு, தன் சீடர்களுக்குப் பலமுறை கூறியும், சீடர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல், இயேசுவுக்கு இடப்புறமும் வலப்புறமும் இருக்கைகளில் அமர்வதிலேயே அவர்கள் கருத்தாய் இருந்தனர் என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

எருசலேமில், இயேசு சுமந்த சிலுவையில், உலகில் துன்புறும் அனைத்து மனிதர்களின் துயரங்களையும் சுமந்தார் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, போர், தீவிரவாதம், அடிமைத்தனம் என்ற பல கொடுமைகளால் இன்றும் ஆயிரமாயிரம் அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இன்று பொறுப்பேற்கும் புதிய கர்தினால்கள், திருஅவையின் 'இளவரசர்கள்' என்று அழைக்கப்பட்டாலும், தன் வலப்புறமும், இடப்புறமும் அமர்வதற்கு இவர்கள் அழைக்கப்படவில்லை என்றும், மாறாக, சிலுவைகளைச் சுமக்க எருசலேமுக்கு இயேசு இவர்களை அழைக்கிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.