2017-06-29 15:07:00

திருத்தந்தை : புனித பேதுருவும், பவுலும், திருஅவையின் தூண்கள்


ஜூன்,29,2017. தங்கள் இரத்தத்தைச் சிந்தி, விசுவாசத்திற்கு சான்று பகர்ந்ததால், திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் இருவரையும், திருஅவையின் தூண்களென திருஅவைத் தந்தையர் குறிப்பிட்டுள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் கூறினார்.

ஜூன் 29, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை, புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, அத்திருப்பலியின் இறுதியில், வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.

தங்கள் பணி வாழ்வின் துவக்கத்திலேயே புனிதர்கள் பேதுரு, பவுல் இருவரையும் கொல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளிலிருந்து அவ்விருவரையும் இறைவன் காப்பாற்றி, நற்செய்தி பணியை அவர்கள் பெருமளவு நிறைவேற்றியபின்னர், மறைசாட்சிகளாக மரணமடையும் அருளை அவர்களுக்கு வழங்கினார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இப்புதன் மாலையில் கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஐந்து பேருக்கும், இவ்வியாழன் காலை திருப்பலியில் பாலியம் கழுத்துப்பட்டையைப் பெற்ற பேராயர்களுக்கும் மூவேளை செப உரையின் இறுதியில் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விழாவில் கலந்துகொள்ள, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களின் பிரதிநிதிகளாக வத்திக்கானுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஜூன் 29ம் தேதி, வத்திக்கானுக்கு மட்டுமல்லாமல் உரோம் நகர் முழுமைக்கும் ஒரு சிறப்பான திருநாள் என்பதால், உரோம் நகர் வாழும் அனைவருக்கும் திருத்தந்தை தன் தனிப்பட்ட வாழ்த்துக்களை வழங்கினார்.

மேலும், "நம் மீது இறைவனின் விடுவிக்கும் செயல்கள் வெளிப்படுவதற்கு சான்றுகளாக நாம் விளங்கும்படி, புனிதர்களான பேதுருவும் பவுலும் நமக்காக பரிந்து பேசுவார்களாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக ஜூன் 29ம் தேதி வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.