2017-06-28 16:30:00

ஜூன் 29, பேராயர்களுக்கு பாலியம் வழங்கும் திருத்தந்தை


ஜூன்,28,2017. "நம் ஒவ்வொருவரையும் இறைவன் அன்போடு கண்ணோக்குகிறார்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

@pontifex என்ற முகவரியில், திருத்தந்தை பகிர்ந்துவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், இலத்தீன், போலந்து, அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் ஒவ்வொருநாளும் வெளியாகின்றன.

மேலும், ஜூன் 28, இப்புதன் மாலை நான்கு மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிகழும் ஒரு சிறப்பு வழிபாட்டில், 5 புதிய கர்தினால்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதிரம், தொப்பி, பட்டம் ஆகியவற்றை வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து, புதிய கர்தினால்கள், தங்கள் உறவினர், நண்பர்கள், மக்கள் ஆகியோரை, இப்புதன் மாலை 6 மணி முதல் 8 மணிவரை, வத்திக்கானிலுள்ள அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்திக்கின்றனர்.

ஜூன் 29, இவ்வியாழன் சிறப்பிக்கப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் திருப்பலியை, தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்ட 36 பேராயர்களில், 32 பேருக்கு பாலியம் எனப்படும் தோள்பட்டையை வழங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.