2017-06-26 15:55:00

வாரம் ஓர் அலசல் – சிறப்பான நிலையில் உலகை விட்டுச்செல்ல..


ஜூன்,26,2017. இத்தாலியில் இந்தக் கோடை வெப்பம் அதிகமாகவே உணரப்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும், கடந்த இரண்டு மூன்று கோடைக்காலங்கள், முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பமாக இருந்தன. இந்தியாவில், அடுத்த ஆண்டு கோடையில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய இமயமலைத் தொடரில், ஆண்டு முழுவதும் பனிமூடிக் கிடந்த மலைச்சிகரங்கள் வெறுமையாக மாறிவிட்டன. பாகிரதி மற்றும் கங்கை நதியின் பிறப்பிடமாக விளங்கும் கோமுக் எனப்படும் பனிப்பாறை, கடந்த முப்பது ஆண்டுகளாக கரைந்து வருகின்றது. முன்பெல்லாம் இந்தப் பனிப்பாறையின் குகைவாயிலிலிருந்து ஊற்றைப்போல நீர் பொங்கிவரும். இப்போது அந்த பனிப்பாறை எந்த அளவு உருகியிருக்கிறது என்றால், அந்த குகைக்குள் ஒரு மைல் தூரத்திற்கு நடந்து செல்லலாம், அங்கே சிறிய ஓடையைப்போல நீர் சொரிந்து கொண்டிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஓடிய நதிகளை, பருவமழையின்போது மட்டுமே ஓடும் நதிகளாக, ஒரே தலைமுறையில், நாம் மாற்றிவிட்டோம். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர வளர, இப்பூமி, வருங்காலத் தலைமுறைகள் வாழ்வதற்கு மென்மேலும் கடினமாகி வருகின்றது. இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வருங்காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும். நாம் இப்பூமியில் நுழைந்தபோது இருந்ததைவிட, இன்னும் சிறப்பான நிலையில் இந்த உலகத்தை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியது நம் கடமை.

கிழக்காசிய நாடாகிய மங்கோலியா, உலகில் முக்கியமான கிராமப்புற நாடு, மற்றும், நிலத்தால் சூழப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாகும். புல்வெளிகளும், காடுகளும் அதிகமாக உள்ள இந்நாட்டில், மக்கள், பலகாலமாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இந்நாட்டில், கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை உலகளாவிய நிலையோடு ஒப்பிடும்போது, ஆறுமடங்கு அதிகம். ஆயினும், இந்நோயாலும், வேறுபல தீராத நோய்களாலும் துன்புறுவோர், மரணத்தை அமைதியாகத் தழுவுவதற்கு உதவும் இல்லங்கள், இந்நாட்டில் பல ஆண்டுகளாக இல்லாமலே இருந்தன. ஒரு பெண்ணின் அயரா முயற்சியினால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான், இதற்கென ஓர் இல்லம் உருவாகியிருக்கிறது. Odontuya Davaasuren என்பவர், தனது 17வது வயதில், இரஷ்யாவின் லெனின்கிராட் நகரில், குழந்தை மருத்துவம் படித்துக்கொண்டிருக்கையில், மங்கோலியாவில், அவரது தந்தை, நுரையீரல் புற்றுநோயால் காலமானார். அவர் படிப்பை முடித்து மங்கோலியா திரும்பியபோது, அவரது தந்தை அந்நோயின் வலியால் எவ்வளவு துடித்தார் என்பதை, அவரது சகோதரி வழியாகக் கேட்டறிந்தார். அதன்பின், அவர் மருத்துவராகப் பணியாற்றியபோது, அவரின் மாமியார், கல்லீரல் புற்றுநோயால் துன்புற்று இறந்ததை நேரடியாகப் பார்த்தார். இந்நோயாளர் பலர், வேதனையைத் தாங்க இயலாமல், உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பியதையும் அவர் கண்டார். இதனால், Davaasuren அவர்கள், மங்கோலிய அரசிடம் கடுமையாகப் போராடி, இந்நோயாளர்க்கென ஓர் இல்லத்தைத் தொடங்கி, அவர்கள், மரணத்தை அமைதியாக ஏற்க உதவி வருகிறார் என, கடந்த வாரத்தில் (ஜூன்,21) பிபிசியில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

அன்பர்களே, தான் நுழைந்தபோது இருந்ததைவிட, இன்னும் சிறப்பான நிலையில் இந்த உலகத்தை விட்டுச் செல்ல, பல நல்ல உள்ளங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உழைத்து வருகின்றன. தமிழகத்தில், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வந்ததை நாம் அறிவோம். திருப்பூர், சாமளாபுரம் பேரூராட்சி கிராமங்கள், மதுக்கடைக்கு எதிரான புரட்சிப் பெண்கள் கொண்ட கிராமங்கள் என்ற பெயரைப் பெற ஆரம்பித்துள்ளன. சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடை அகற்றும் போராட்டத்தில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி, காவல்துறை நடத்திய தடியடியில், அதிகாரி (DSP) ஒருவர் அறைந்ததால், ஈஸ்வரி என்ற பெண் பாதிக்கப்பட்டார். அது காணொளியாகப் பதிவாகி, மனித உரிமை மற்றும், பெண்கள் ஆணையங்களின் கண்டனத்திற்கும், விசாரணைக்கும் உள்ளானது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள், சர்ச்சைக்குரிய மதுக்கடையை மூடினர். பேரூராட்சிக்குள் வேறு இடத்திலும் மதுக்கடை திறக்க மாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தனர். அந்த உத்தரவாதத்தையும் மீறி, அகற்றிய மதுக்கடையிலிருந்து, ஏறக்குறைய ஒரு மைல்தூரத்தில் காளிபாளையம் என்ற பகுதியில், இரு வாரங்களுக்கு முன், புதிய மதுக்கடையைத் திறந்தனர் அதிகாரிகள். அதேநேரம் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிகாரிக்கு பணிமாறுதலுடன் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. அதில் ஆவேசமான பெண்கள், இதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதேநாள் மாலை. வேலுமணி என்ற பெண் தன் கழுத்திலிருந்து தாலியை கழற்றி அதிகாரிகள் கையில் கொடுத்துவிட்டார். 'குடிச்சுக் குடிச்சு என் வீட்டுக்காரர் என்ன ஆவாரோன்னு கவலையோடே இந்தத் தாலி என் கழுத்துல தொங்கிறதுக்கு பதிலா, இதை நீங்களே வச்சுக்குங்க!' என்று உணர்ச்சி பொங்கி ஆவேசமாக அவர் பேசியிருக்கிறார்.  கூடியிருந்த சில பெண்களும், தங்களின் தாலிகளைக் கழற்சி வீசத் தயாராக, உடனே மதுபானக் கடையை மூடுவதாக உத்தரவாதம் தந்ததோடு, அடுத்த நாளே பூட்டி, முத்திரை வைத்து விட்டனர் அதிகாரிகள்(தி இந்து, ஜூன் 22,2017 ). தங்களின் பிள்ளைகளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காகவே, இப்பெண்கள் மதுக்கடைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். 

நாகை மாவட்டத்திலுள்ள கீச்சாங்குப்பம், ஒருபக்கம் ஆற்றையும், இன்னொரு பக்கம் கடலையும் கொண்ட அழகிய மீனவக் கிராமம். இந்தக் கிராம மக்கள், தங்கள் உயிராக நேசிக்கும், இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந்தேதி ஏற்பட்ட சுனாமி சூறையாடியது. இந்த பள்ளிக் குழந்தைகள் 80 பேர் உட்பட, 600 உயிர்களை, பேரலை அடித்துச் சென்றுவிட்டது.  பள்ளிக் கட்டடமும் இடிந்து சேதமானது. இதனால், பெற்றோர், தங்களது பிள்ளைகளை, தொலைவில் உள்ள நகர்ப்புற பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். நானுாறு பேர் படித்த பள்ளியின் எண்ணிக்கை 190க்கு வந்தது. இச்சூழ்நிலையில், பாலு ஆசிரியர், இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவர், இந்த ஊர் மக்கள், மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும், தொண்டு நிறுவனங்களின் உதவியோடு பள்ளி கட்டடத்தைப் புதுப்பித்தார். நுாலகம், ஆய்வுக்கூடம், குடிநீர், சுகாதாரமான கழிப்பறை போன்றவற்றுடன், ஒரு வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாகவும் மாற்றினார். இப்படி ஒரு வகுப்பு இந்தப் பள்ளியில் நடத்தப்படுகிறது என்பதை ஊர் மக்களிடம் சொல்வதற்காக இலவச மருத்துவ முகாமும் நடத்தினார் அவர். மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்கள், பள்ளி கட்டடத்தையும், இருந்த வசதிகளையும் பார்த்துவிட்டு, அந்த ஆண்டே தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்த்தனர். இதன் காரணமாக, மாணவரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.

மேலும், பள்ளியில், சிறுவர் பூங்கா, மாடித்தோட்டம் அமைத்ததுடன், மாணவர்களுக்கு கூடுதலாக யோகா, கராத்தே, ஆங்கிலம் பேச.. என்று பலவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் எண்ணிக்கை, மேலும் அதிகரித்தது. கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், தனியார் பள்ளிகளுக்கு கிடைக்காத, ISO சான்று, இந்த மீனவ கிராமத்துப் பள்ளிக்கு கிடைத்துள்ளது. இதற்காக, கடந்த மே மாதம் நடைபெற்ற பள்ளி விழாவிற்கு வந்த கிராம மக்கள், மேளதாளம் முழங்க, தங்களால் முடிந்தது என்று, பள்ளிக்கு பீரோ, காற்றாடி, நாற்காலி, பெஞ்சு என்று, ஏறக்குறைய இரண்டு இலட்ச ரூபாய்க்கு சீர்வரிசை கொண்டுவந்து கொடுத்தது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என, தினமலர் தினத்தாள் சொல்லியுள்ளது. அன்பர்களே, எல்லாவற்றையும் போராட்டமாக மாற்றும் மனிதர்கள் இருக்கும் இக்காலத்தில், ஆரவாரமில்லாமல் வருங்காலத் தலைமுறைக்காகச் செயல்படும் நல்மனத்தவரும் உள்ளனர். 

ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர், நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. "காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?'' என, நீதிபதி கேட்க, "இல்லை' என்றார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம், நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார் அவர். இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்துவிடுகிறேன் என்றார் நீதிபதி. இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. "என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டுவிடுங்கள் என்று நீதிபதி கூறியதும், " ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை'' என, பயந்து நடுங்கிக்கொண்டே சொன்னார் இயக்குனர். "பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான். அதற்குமேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதரின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. அகந்தையின் தேவைகள்தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் அகந்தைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப்போதாது என்றார் நீதிபதி. இயக்குனர் ஓவென அழ ஆரம்பித்தார்.

இந்தக் குட்டிக் கதையில், அந்த இயக்குனர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல. நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. நாம் இறந்தபின் நம்மோடு கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதைவிட, இருப்பதைப் பகிர்ந்து வாழத் தூண்டுகிறது. இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வருங்காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றது. நாம் இவ்வுலகில் நுழைந்தபோது இருந்ததைவிட, இன்னும் சிறப்பான நிலையில் இந்த உலகத்தை விட்டுச் செல்வோம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.