2017-06-26 16:56:00

போதைப்பொருள் வியாபாரம் குறித்து திருஅவை கவலை


ஜூன்,26,2017. தேசிய அளவிலும், உலக நாடுகளின் எல்லைகளுக்கு இடையேயும் போதைப்பொருள் சந்தையை ஊக்குவிக்கும் கும்பல்களால் போதைப்பொருள் வியாபாரம் ஒடுக்க முடியாததாக விரிந்து வளர்வதாக கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்கள், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் போதைப்பொருள் பயன்பாடு, மற்றும், சட்டவிரோத வியாபாரத்திற்கு எதிரான உலக நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

போதைப்பொருளை சார்ந்திருக்கும் நிலையும், அது தினசரி வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையும் கவலை தருவதாக உள்ளது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

கணனி வலைத்தளங்கள் வழியாக புதிய போதைப்பொருட்கள் விற்கப்படுவது குறித்தும் கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், விளையாட்டுகள் பெயராலும், நலவாழ்வு என்ற போர்வையிலும், போதைப்பொருட்கள் ஊக்குவிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறுபல முக்கியத் தேவைகளில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதையும் கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.