2017-06-26 16:23:00

தேங்கிப்போகும் கிறிஸ்தவர் உண்மையான கிறிஸ்தவரல்லர்


ஜூன்,26,2017.  கிறிஸ்தவர் என்பவர் ஒரே இடத்தில் முடங்கிப்போய் விடுபவர் அல்ல, மாறாக, கடவுளில் நம்பிக்கைக் கொண்டு அவரால் வழிநடத்தப்பட தன்னையே அனுமதிப்பவர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில், இறைவன் ஆபிரகாமை அழைத்த நிகழ்வை மையப்படுத்தி வழங்கிய மறையுரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தேங்கிப்போகும் கிறிஸ்தவர் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது, என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆபிரகாமின் எடுத்துக்காட்டை முன்வைத்து, நம் பாதுகாப்பான நிலைகளை விட்டு வெளியே வந்து முதல் அடிகளை எடுத்துவைக்க வேண்டும் என்றார்.

வருங்காலத்தைக் குறித்த தெளிவற்ற நிலைகள் இருப்பினும், இறைவன் மீது நம்பிக்கை வைத்து அனைத்தையும் துறந்து அவர் காட்டும் வழியில் செல்வதே உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் எனவும் கூறினார் திருத்தந்தை.

இறைவனின் வாக்குறுதியை நம்பி, அது நிறைவேறுவதை நோக்கி எவ்வாறு ஆபிரகாம் முன்னோக்கி நடந்தாரோ, அதேவண்ணம், நம் ஒவ்வொரு நாள் விடியலிலும் பயணம் தொடர்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரும் மற்றவர்களை ஆசீர்வதிப்பவர்களாகச் செயல்படவேண்டும் ஏனெனில், ஆசீர்வதித்தல் என்பது கிறிஸ்தவத்தின் ஒரு கூறு எனவும் எடுத்துரைத்தார்.

மனித குலம் மேலும் முன்னேறிச் செல்ல, ஒருவருக்கொருவர் அன்புகூர வேண்டிய தேவைகள் குறித்தும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.