2017-06-24 15:18:00

மனித வர்த்தகத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு திருப்பீடம்


ஜூன்,24,2017. மனித வர்த்தக அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளவர்களை, அச்சூழலிலிருந்து விடுவிப்பதற்கு, இயலக்கூடிய எல்லாவித வாய்ப்புக்களையும் பயன்படுத்தவேண்டியது அவசியம் என, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கூறினார்.

மனித வர்த்தகத்தை ஒழிப்பது குறித்த உலகளாவிய செயல்திட்டம் பற்றி, வருகிற செப்டம்பரில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்திற்குத் தயாரிப்பாக, இவ்வெள்ளியன்று, நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்ற ஐ.நா. அமர்வில், ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

மனித வர்த்தகம், இன்றைய உலகில் மிகவும் அச்சுறுத்துகின்ற, மற்றும், துயரம் நிறைந்த நடவடிக்கைகளில் ஒன்று என்றும், இதில் தற்போது சிக்கியுள்ளவர்கள் மற்றும், இதிலிருந்து மீண்டவர்களின் மனித உரிமைகள் குறித்தும், இவர்களின் இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்தும், தான் வலியுறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார், பேராயர் அவுசா.

மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது முக்கியமானது எனினும், இது போதாது என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், இவர்களின் சட்டமுறையான, பொருளாதார, கல்வி, மருத்துவ மற்றும், உளவியல் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா.வில் உரையாற்றினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.