2017-06-24 15:33:00

இளையோரை இனிமேலும் கொலை செய்ய வேண்டாம்


ஜூன்,24,2017. வெனிசுவேலா நாட்டில், தற்போது நிலவும் ஒரு சூழலைப் போன்ற  வருங்காலத்தில், நம்பிக்கை வைக்காததே, அந்நாட்டு இளையோர் செய்யும் பெரும் பாவம் என்று சொல்லி, இளையோரைக் கொலை செய்ய வேண்டாமென, கடவுள் பெயரால் விண்ணப்பிப்பதாக, அந்நாட்டு ஆயர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

அடிப்படை தேவைகளில் கடும் பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும் வெனிசுவேலா மக்கள், அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்திவரும் இந்நாள்களில், மீண்டும் ஓர் இளைஞர் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு, தன் டுவிட்டரில், இவ்வாறு  விண்ணப்பித்துள்ளார், அந்நாட்டின் த்ருஹில்லோ ஆயர்,Oswaldo Azuaje Pérez.

ஜூன் 22, இவ்வியாழனன்று, அரசை எதிர்க்கும் பேரணியில் கலந்துகொண்ட, 22 வயது நிரம்பிய David Vallenilla என்ற இளைஞர், இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்களும், வெனிசுவேலா நாட்டிற்கு உணவுப் பொருள்களும், மருந்துகளும் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், மற்றும், பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்று, அமெரிக்க நாடுகள் அமைப்பு, இவ்வாரத்தில் மெக்சிகோவில் நடத்திய கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். 

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில், கடந்த ஏப்ரலிலிருந்து குறைந்தது 75 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.