2017-06-23 15:43:00

பாசமுள்ள பார்வையில்...: செவிமடுக்க ஓர் உள்ளம் போதும்


ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மனிதர். 65 வயதிருக்கும் அந்த முதியவருக்கு, சில நாட்களில் பத்து ரூபாய் கிடைப்பது உண்டு, சில நாட்களில் 50 ரூபாய்வரை கிட்டியதும் உண்டு. ஒரு நாள் கல்லூரிக்குச் செல்லும் மாணவி ஒருவர் அவரருகில் வந்தாள். ' ஐயா. ரொம்ப நாட்களாக உங்களைக் கவனிக்கிறேன். பகல் முழுவதும் இங்கேயேதான் இருக்கிறீர்கள். உங்களுக்கு சொந்த வீடு இல்லையா' என்று கேட்டாள் அப்பெண். அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்து, அவளின் கனிவான முகத்தைக் கண்ட அந்த முதியவருக்கு, கண்களில் ஈரம் கசிந்தது. தன் கதையை மளமளவென சொல்ல ஆரம்பித்தார். தான் தனியார் நிறுவனமொன்றில் கணக்கராக வேலை செய்ததும், தனக்கு குழந்தைகள் இல்லையென்பதும், மனைவி இறந்தபின் யாருக்கும் பாரமாக‌ இருக்க விரும்பாமல், ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் இங்கு வந்து விட்டதையும் கூறினார். இருவரும் கடந்த காலக் கதையில் மூழ்கி விட்டதால், நேரம் போனதே தெரியவில்லை. அன்று கல்லூரிக்குச் செல்ல முடியாத அந்த இளம்பெண், அந்த முதியவர் வைத்திருந்த ரொட்டியை அவருடனேயே பகிர்ந்து உண்டார். நான்கு மணி நேரம் அவருடன் உரையாடிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் அப்பெண். அவருக்கு பிச்சையாக எதுவும் போடவில்லை. அந்த இளம்பெண் போனபின், பக்கத்திலிருந்த கடைக்காரரிடம், அந்த முதியவர் சொன்னார், 'இன்றுதான் எனக்கு யாரோ, இலட்ச ரூபாய் பிச்சை கொடுத்ததுபோல் உள்ளது. என்னை ஓர் இரந்துண்பவனாக பார்த்தவர் மத்தியில், இந்தப் பெண்தான், என்னை ஒரு மகன்போல் நடத்தி, என் குரலுக்கு இவ்வளவு பொறுமையாகச் செவிமடுத்திருக்கிறார். சிறுவயதில் இழந்த தாயை, இன்றுதான் நான் பார்த்தேன். இந்த ஏழையின் உணவைப் பகிர்ந்து கொண்டாரே, இதைவிட என்ன அங்கீகாரம் எனக்கு இந்த உலகில் வேண்டும். யார் பெற்ற பிள்ளையோ, நன்றாக இருக்க வேண்டும்'.

கடைக்காரருக்குத் தெரியும், அந்த பெண் யாரென்று. வீட்டில் பத்து வாகனங்கள் இருந்தும், எளிமையை விரும்பி, நடந்தே கல்லூரிக்குச் செல்லும் அந்த பெண், அந்த சுற்றுவட்டாரத்திலேயே பெரிய கோடீஸ்வரரான சிவலிங்கத்தின் ஒரே மகள். அந்த தாய் சென்ற திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்.............. அந்தக் கடைக்காரர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.