2017-06-22 15:55:00

மூன்றாண்டுகளில் ஈராக்கில் 1,075 குழந்தைகள் கொலை


ஜூன்,22,2017. ஈராக் நாட்டில் 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை 1,075 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நாட்டில், 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால உணவு உதவிகள் தேவைப்படுவதாகவும், யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 152 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என, கவலையை வெளியிடும், குழந்தைகளுக்கான இந்த ஐ.நா. அமைப்பு, 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை, 1,075 குழந்தைகள் கொல்லப்பட்டது தவிர, 1,130 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டும், உறுப்புகள் இழக்கப்பட்டும் உள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.

ஈராக் நாட்டில் 4,650 குழந்தைகள், தங்கள் பெற்றோரைப் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறும் இந்த ஐ.நா. அமைப்பு, 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்லாமலேயே வாழ்கின்றனர் எனவும் தெரிவிக்கிறது.

ஈராக் நாட்டில், பள்ளிகள் மீது 138 தாக்குதல்களும், மருத்துவமனைகள்மீது 58 தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாகவும், யுனிசெஃப் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவற்ற வன்முறையாலும், பரவலான ஏழ்மையாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் குழந்தைகள், தொடர் வன்முறைகளால் தங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றமுடியாத சூழலில் உள்ளனர் எனக் கூறும் யுனிசெஃப் என்ற இந்த குழந்தைகள் அமைப்பு, மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படல், மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்படல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படல், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட முதலீடு செய்தல் போன்ற பரிந்துரைகளை, தன் அறிக்கையில் முன்வைத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.