2017-06-22 16:00:00

கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ இருப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது


ஜூன்,22,2017. மத்திய கிழக்கு உட்பட, பல கிழக்கு நாடுகளில் சித்ரவதைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள், மேற்கத்திய நாடுகளில் குடியேறும்போது, அவர்கள் தங்கள் பாரம்பரிய வழிபாட்டுமுறைகளோடு வாழ உதவும் அமைப்புகளுக்கு, தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்குரிய உதவிப் பணிகளின் ஒன்றிணைவு என்ற ROACO அமைப்பின், 90வது நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட, ஏறத்தாழ 100 பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் சந்தித்துவரும் சித்ரவதைகளையும், அப்பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறவேண்டிய நிலை உருவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் செழித்து வளர்ந்த இடங்களிலிருந்து மக்கள் தற்போது வெளியேறி வருவதால், அங்கு கிறிஸ்தவத்தின் இருப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்ற திருத்தந்தை, சிரியா, ஈராக், எகிப்து போன்ற நாடுகளில் அடிப்படைவாத பயங்கரவாதிகளின் வன்முறைகளால், குழந்தைகள் பெருமளவில் துன்பங்களை அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இயேசுவின் சிலுவை அனுபவத்தைத் தரும் இத்தகைய வன்முறை நிகழ்வுகளைக் காணும்போது, இயேசுவின் சிலுவைதான் மீட்பையும் கொணர்கிறது என்பதையும் உணர்கிறோம் என்ற திருத்தந்தை, சிலுவையின் துணையின்றி நம்மால் நடைபோடவோ, எதையும்  கட்டியெழுப்பவோ முடியாது என, தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள் கூறியதை மீண்டும் நினைவூட்டினார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், பல வணக்கத்துக்குரிய நினைவுகளாலும், இடங்களாலும் நிறைந்திருக்கும் சூழலில், மக்கள் தங்கள் விசுவாசத்தின் ஆதாரத்தைக் கண்டுகொள்ள உதவும்பொருட்டு, இப்பகுதிகளில் திருப்பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்குள்ள கோவில்கள் சீரமைக்கப்பட்ட அனுமதிக்கப்படாத சூழல்களில், நாமே இறைவனின் உயிருள்ள ஆலயங்களாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.