2017-06-21 16:18:00

வெனிசுவேலா நெருக்கடி குறித்து திருப்பீட அதிகாரி


ஜூன்,21,2017. வெனிசுவேலா நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு, அந்நிலைகளோடு தொடர்புடைய கட்சிகள், நேர்மையுடனும், உண்மையான அக்கறையுடனும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் இன்றியமையாதவை என, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

மெக்சிகோ நாட்டின் Cancun நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் இவ்வாறு உரையாற்றினார், ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

பொது மக்களின் குரலுக்குச் செவிமடுக்கவும், பொது நலைனைப் பாதுகாக்கவும் வேண்டுமென, வெனிசுவேலாவில் பிரச்சனை தொடங்கியதிலிருந்து, திருத்தந்தை, திருப்பீடச் செயலர், அந்நாட்டு ஆயர்கள் ஆகியோர், நிறுவனங்களுக்கும், அரசியல் சக்திகளுக்கும், பல தருணங்களில் அழைப்பு விடுத்து வந்ததையும் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர் அவுசா.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழிகளுக்கு உதவாமல், பொதுத்தேர்தலை நடத்த, தற்போதைய அரசு தீர்மானித்திருப்பது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் மற்றும், நாட்டின் வருங்கால சனநாயகத்தை இடருக்கு உட்படுத்தும் எனவும் எச்சரித்தார், பேராயர் அவுசா.  

வெனிசுவேலா அரசு, மற்றும், எதிர்தரப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தென் அமெரிக்க நாடுகள் அல்லது, ஏனைய கண்டங்களின் பிரதிநிதிகள், கலந்துரையாடலை நடத்துவதை, திருப்பீடம் ஆதரிக்கின்றது என்றும் பேராயர் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.