2017-06-21 16:37:00

வாழ்வதற்கு ஏற்ற 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு


ஜூன்,21,2017. பால்வெளி மண்டலத்தில், வாழ்வதற்குத் தேவையான சூழல்களைக் கொண்டிருக்கக்கூடிய பத்து புதிய கோளங்களைக் கண்டுபிடித்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியைப் போன்ற பிற கோள்களைக் கண்டறிய நாசா அறிவியலாளர்களால் நிறுவப்பட்ட கெப்லர் விண்வெளி தொலை நோக்கியின் அண்மையத் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், பாறைகள் கொண்ட பத்து கோள்களைக் கண்டறிந்துள்ளதாக, அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்மீனிலிருந்து சரியான தூரத்தில் இருப்பதால், கோள்களில், நீர், திரவ நிலையிலேயே இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தற்போதுவரை பால்வெளி மண்டலத்தைச் சுற்றி, பூமியைப் போன்ற அளவு மற்றும் வெப்பநிலையைக் கொண்ட ஏறக்குறைய ஐம்பது கோள்களை, கெப்லர் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்ளரின் நான்கு ஆண்டு பணியில், 2,335 கோள்களும், 1,699 சிறிய விண் உறுப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஏறக்குறைய 3,500 கோள்கள் இருப்பதாகவும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதாரம் : Agencis/பிபிசி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.