2017-06-21 15:49:00

புலம்பெயர்ந்தவர் குறித்த புதிய சட்டத்திற்கு வரவேற்பு


ஜூன்,21,2017. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு, புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கிய பின், அவர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன்,20, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக புலம்பெயர்ந்தவர் நாளையொட்டி, தான் சந்தித்த புலம்பெயர்ந்தவர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

உரோம் நகரில், பங்குத்தளங்கள், மற்றும், துறவு நிறுவனங்கள் அடைக்கலம் அளித்துள்ள புலம்பெயர்ந்தவர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்றைச் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டு, புலம்பெயர்ந்தவர் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நான் அந்நியனாக இருந்தேன் : நல்லது செய்யும் மனித சமுதாயம்” என்ற சுலோகத்துடன், புலம்பெயர்ந்தவர் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படுவதற்கு தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, இத்தாலிய காரித்தாஸ், புலம்பெயர்ந்தவர் நிறுவனம் மற்றும், ஏனைய கத்தோலிக்க நிறுவனங்களும் ஆதரவளித்து வருவதையும், திருத்தந்தை குறிப்பிட்டார்.

இத்தாலிய சமூகத்திலும், பணித்தளத்திலும், புலம்பெயர்ந்தவர்களை நன்றாக ஒருங்கிணைக்கும் நோக்கத்தில், இத்தாலிய அரசியலில், அண்மை வாரங்களாக, இப்புதிய சட்ட வரைவு குறித்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

உலகளவில், புலம்பெயர்ந்தவர் எண்ணிக்கை, ஆறு கோடியே 56 இலட்சமாக உயர்ந்திருப்பதாக, ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2016ம் ஆண்டின் இறுதியில் இருந்த புலம்பெயர்ந்தவர் எண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட மூன்று இலட்சம் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், “மக்கள் மாண்புமிக்க வாழ்வு வாழ்வதைத் தடைசெய்யும், புதிய வடிவ வறுமை மற்றும், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுதல் கண்டு, நாம் புறமுதுகு காட்டக் கூடாது” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், ஜூன் 21, இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.