2017-06-21 15:31:00

நம் உலகுக்கு சந்திப்பு கலாச்சாரம் எவ்வளவு தேவைப்படுகின்றது!


ஜூன்,21,2017. குழுவாகப் பணியாற்றுதல், நியாயமான விளையாட்டு, தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் ஆகிய விழுமியங்கள், கால்பந்து விளையாட்டுத் துறைக்கு மட்டுமல்ல, நம் சமூக வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இன்றியமையாதவை என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறினார்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்கு முன், காலை 9 மணிக்கு, அமெரிக்க தேசிய கால்பந்து விளையாட்டு கழகத்தின் Hall of Fame அமைப்பின் 43 பிரதிநிதிகளை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், சந்தித்து வாழ்த்திப் பேசிய திருத்தந்தை, சமய உணர்வில் நற்பண்புகள் எனவும் சொல்லக்கூடிய இந்த விழுமியங்கள், சந்திப்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றன எனக் கூறினார்.

சந்திப்புக் கலாச்சாரத்தில், நம் சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்பையும், தேவைகளையும் உணர்கின்றோம் என்றும், இக்கலாச்சாரத்தில், ஒரே மனிதக் குடும்பம் என்ற உணர்வில் வாழ்வதற்கு, நம்மைப் பின்வாங்கச் செய்கின்ற, மிகைப்படுத்தப்பட்ட தனிமனிதக் கோட்பாடு, புறக்கணிப்பு மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்பட முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

சந்திப்புக் கலாச்சாரம், இன்றைய நம் உலகுக்கு எவ்வளவு தேவைப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறந்த உடன்பிறப்பு உணர்வு கொண்ட ஓர் உலகை அமைப்பதற்கு, கடவுள் அளித்துள்ள கொடைகளை, இக்கழகத்தினர் மேலும் தாராளமாய் பயன்படுத்துவதற்கு, அவர்களின் உரோமைப் பயணம் உதவுவதாக என வாழ்த்தினார்.

தான் ஒரு கால்பந்து விளையாட்டுப் பிரியர் என்பதையும், இச்சந்திப்பில் கூறியத் திருத்தந்தை, நம் உலகுக்கு, குறிப்பாக, இளையோருக்கு, கடவுள் தங்களுக்கு அளித்துள்ள கொடைகளை, சிறந்த முறையில் பயன்படுத்தும், நல்ல எடுத்துக்காட்டான மனிதர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், இக்கழகத்தினர் அத்தகைய மனிதர்களாக வாழ்வார்கள் என்றும், தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.