2017-06-21 15:38:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 22


 ஜூன்,21,2017. திருத்தூதர் பவுல், தனது இரண்டாவது நற்செய்தி தூதுரைப் பயணத்தில், கிரீஸ் நாட்டின் ஏத்தென்சு நகர் சென்றார். அந்நகரில் சிலைகள் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினார் அவர். எனவே பவுல் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும், சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும், ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார். அந்நகரின் மெய்யியல் அறிஞர்கள் சிலர், அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றிப் பேசும் எனக்  கேட்டனர். பவுல் எழுந்து நின்று இவ்வாறு கூறினார்.  “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு”என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.“உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார்.

கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.” நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனித கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானதென எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.”

“இறந்தவர் உயிர்த்தெழுதல்”என்பது பற்றிக் கேட்டதும், சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்”என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு பவுலுடன் சேர்ந்துகொண்டனர் (தி.பணி.17,22-32).

அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற மெய்யியல் அறிஞர்கள் வாழ்ந்த மண் ஏத்தென்சு. கிரேக்க நாட்டின் தலைநகரமாகவும்,பெரிய நகரமாகவும் விளங்கும் இந்நகரம், உலகில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,400க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்நகரில், கி.மு.11க்கும், 7க்கும் இடைப்பட்ட காலத்திலே மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனச் சொல்லப்படுகிறது. கலைக்கும், கல்விக்கும், மெய்யியலுக்கும் புகழ்பெற்ற இந்நகரம், மேற்கத்திய கலாச்சாரத்தின் தொட்டில் மற்றும், சனநாயகத்தின் பிறப்பிடம் எனவும் சொல்லப்படுகிறது. உலகளாவிய நகரம் எனவும் இது அழைக்கப்படுகின்றது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் கொண்டிருக்கும் இந்நகரில் கிறிஸ்துவை அறிவித்தபின், கிரேக்கத்தின் தென் பகுதியிலுள்ள கொரிந்து நகர் சென்றார் பவுல். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். கொரிந்தியருள் பலரும், பவுல் கூறியவற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். ஒருநாள் இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்”என்று சொன்னார். பவுல் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.

பின், ஆசியாவின் தலைநகரமாக விளங்கிய எபேசு சென்றார் பவுல். அந்நகரில் யூதரின் தொழுகைக் கூடங்களுக்குச் சென்று, மூத்தவர்களோடு உரையாடி, கிறிஸ்தவக் கோட்பாடுகள் பற்றி விவாதங்களை நடத்தினார். அவர்கள் அவரை இன்னும் நீண்ட காலம் தங்களோடு இருக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, “கடவுள் விரும்பினால் நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்”என்று கூறி எபேசிலிருந்து புனித பூமிக்குப் புறப்பட்டார். இத்துடன் திருத்தூதர் பவுலின் இரண்டாவது தூதுரைப் பயணம் முற்றுப்பெற்றது. திருத்தூதர் பவுல் சொல்கிறார்...

வாழ்வில் போராட்டங்கள் உண்டு. அதனால் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும் (எபே.6,10-16).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.