2017-06-19 15:35:00

வாரம் ஓர் அலசல் – வாழ்க தந்தையர்!


ஜூன்,19,2017. வறிய மற்றும், பணக்கார நாடுகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை, எவ்வாறு கணிப்பது? அவற்றின் வயதை வைத்துச் சொல்ல முடியாது என்பதற்கு, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வயதைக் கொண்டிருக்கும் இந்தியா, எகிப்து போன்ற நாடுகள் எடுத்துக்காட்டு. ஆனால், கானடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த, மற்றும் பணக்கார நாடுகளின் வயது 150. அடுத்து, இந்த வேறுபாடு, அந்நாடுகளில் கிடைக்கும் இயற்கை வளங்களையும் சார்ந்ததல்ல. எடுத்துக்காட்டாக, ஜப்பானில், எண்பது விழுக்காடு நிலம், வேளாண்மைக்குத் தகுதியற்ற மலைப்பகுதி. ஆனால் இந்நாடு பொருளாதாரத்தில், உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து, cocoaவை உற்பத்தி செய்வதில்லை. ஆனால், உலகில் சாக்லேட் உற்பத்தியில் நம்பர் ஒன். இந்நாடு தனது சிறிய நிலபரப்பில், விலங்குகளை வளர்க்கின்றது. நான்கு மாதங்களுக்கு மட்டுமே நிலத்தில் பயிரிடுகிறது. இருந்தபோதிலும், பால் உற்பத்தியில் இந்நாடு தலைசிறந்து விளங்குகிறது. ஆக, நாடுகளை வேறுபடுத்திக் காட்டுபவை, அடிப்படை அறநெறிக் கோட்பாடுகள், கூறுபடா ஒருங்கிணைந்த வாழ்வு நிலை, பொறுப்புணர்வு, சட்டம் மற்றும் ஒழுங்குகளை மதித்தல், குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்படுதல், தொழிலின் மீது பற்று, சேமிக்கும் மற்றும், முதலீடு செய்வதில் ஆர்வம், நேரம் தவறாமை, படைப்பாற்றலில் விருப்பம் போன்றவற்றில் மக்களின் நிலைப்பாடாகும். வறிய நாடுகளில், குறைவான மக்களும், வளர்ந்த மற்றும், பணக்கார நாடுகளில் பெருமளவான மக்களும், இவற்றை தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர். எனவே ஒரு நாடு வறிய நிலையில் இருக்கின்றதென்றால், அந்நாட்டில், வளங்கள் இல்லாமையால் அல்ல, மாறாக, மக்களின் வாழ்வில் மேற்சொன்ன கூறுகள் குறைவுபடுவதே காரணம் எனச் சொல்லப்படுகின்றது.  ஆக, வாழ்வில் உயர, நம் எண்ணத்திலும், வாழும் முறையிலும் மாற்றம் அவசியம்.

எந்த ஒரு நாட்டிலும், உயர்ந்த இலட்சியங்களையும், சிறந்த நல்லெண்ணங்களையும் கொண்டு, வாழ்கின்றவர்கள் சிகரத்தை எட்டுகின்றனர். இம்மாதத் தொடக்கத்தில் (ஜூன்,07,2017), “ஒரு குடிசை கோபுரம் ஆகிறது; கூலித்தொழிலாளி மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி” என்ற தலைப்பில், ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது தந்தை ஆறுமுகம், நெய்வேலி சுரங்கத்தில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் பணியில் இருந்து விடுபட்டவர். அவருடைய மனைவி வள்ளி அவர்கள், கூலிவேலை செய்து குடும்பச் செலவையும், மகன் மணிகண்டனின் படிப்புச் செலவையும் சமாளித்து வந்தார். மணிகண்டன் அவர்களும், பள்ளி விடுமுறை நாள்களில் அம்மாவுடன் கூலிவேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தால், தனது மேல்படிப்பைத் தொடர்ந்தார். கோவையில் பி.பார்ம், பின்னர், சென்னையில் எம்.பார்ம் படிப்பை முடித்தார். பின்னர் தனது சிறுவயது கனவான ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வை 2016ம் ஆண்டு எழுதினார். அதில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வை எழுதி, அதிலும் 332வது இடத்தில் வெற்றி பெற்றார். இரண்டு தேர்வுகளையும் அவர் தமிழிலேயே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியவுள்ள மணிகண்டனின் வாழ்க்கை, கோபுரம் அளவுக்கு உயரவுள்ளது. விடாமுயற்சி, உழைப்பு, கல்வி ஒருவரை, குடிசையில் இருந்து, கோபுரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு மணிகண்டனின் வாழ்க்கையைவிட வேறு உதாரணம் வேண்டுமா? என்று IndiaGlitz என்ற இணையச் செய்தி கூறியுள்ளது.

27 வயதாகும் மணிகண்டன் அவர்களும், வறுமை என்னை வெற்றி காணக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். வறுமையின் காரணமாக, இவரது தங்கை சத்யாவின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. இவரின் குடும்பம், வானம் பார்த்த பூமியில், கூரை வீட்டில் வாழ்கின்றது. ''எனது படிப்பில்தான் எனது வாழ்க்கையும், குடும்பத்தினரின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. எனது கனவை நனவாக்க நல்ல நண்பர்களின் உதவியும், அவர்கள் அளித்த ஆலோசனையும், தேர்வை சிறப்பான முறையில் எதிர்கொள்ள வைத்தது”என்று விகடன் பேட்டியில் அவர் கூறியுள்ளார். சென்னையில், இச்சனிக்கிழமையன்று விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் ஜூனியர் ஐந்தில், ஓர் ஏழை, கிராமத்துச் சிறுமி பிரித்திகாவே முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். கர்நாடக இசையே கற்காமல், முயற்சிசெய்து, நல்மனத்தோர் கொடுத்த ஊக்கம் மற்றும், உதவியைக் கொண்டு, இந்நிலைக்கு அவர் எட்டியுள்ளார். பிள்ளைகள் வெற்றியடையும்போது, பெற்றோர் சிந்தும் மகிழ்ச்சிக் கண்ணீர் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. தங்கள் பிள்ளைகளை உயர்த்த சில பெற்றோர் செய்யும் தியாகங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இளைஞர் மணிகண்டன் பற்றி எழுதிய ஊடகங்கள், கூலித்தொழிலாளியின் மகன் என, அவரின் அப்பாவின் தொழிலைச் சொல்லித்தான் பெருமைப்படுத்தியுள்ளன. இவ்வாறு, வறிய நிலையிலுள்ள பிள்ளைகள் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் வாங்கும்போது, ஊடகங்கள் தந்தையரின் தொழில்களை மறக்காமல் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வறிய நிலையிலும், பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளனர், பிள்ளைகளும் கடினமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றே புகழ்மொழிகள் வெளியாகின்றன. அப்பாக்கள், தந்தையர் என்று, இன்று நாம் பேசும்போது, ஜூன் 18, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட அப்பா தினம், தந்தை தினம் நினைவுக்கு வருகின்றது. இத்தினம், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று உலகில் 52 நாடுகளில் சிறப்பிக்கப்படுகின்றது. மார்ச் 19, இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப் விழாவன்று, இத்தாலி, போர்த்துக்கல், இஸ்பெயின், குரோவேஷியா, பொலிவியா, கொண்டூராஸ், மொசாம்பிக், அங்கோலா போன்ற நாடுகளில் சிறப்பிக்கப்டுகின்றது. அன்னை தினத்தைப் போன்று, தந்தை தினம் அல்லது அப்பா தினத்திற்கும் ஒரு வரலாறு உள்ளது.

1907ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு West Virginiaவின், Monongahவில் நடந்த சுரங்க விபத்தில் 360க்கும் மேற்பட்ட ஆண்களும், சிறுவர்களும் இறந்தனர். இதனால் ஏறக்குறைய ஆயிரம் சிறார் தந்தையரை இழந்தனர். இறந்த இத்தந்தையரின் நினைவு மற்றும், தன் தந்தையின் நினைவாக வழிபாடு நடத்த வேண்டுமென, திருமதி Grace Golden Clayton என்பவர் கேட்டுக்கொண்டதன்பேரில், Williams Memorial Methodist Episcopal ஆலயத்தில், 1908ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, தந்தை தினத்திற்கென முதன் முதலாக வழிபாடு நடத்தப்பட்டது. இதுவே தந்தை தினத்தின் ஆரம்பமாகும். எனினும், 1909ம் ஆண்டில், அன்னை தினம் பற்றிய மறையுரை ஒன்றைக் கேட்ட சொனாரா டாட் (Sonora Smart Dodd) என்பவர், தந்தை தினத்தைச் சிறப்பிக்க முடிவெடுத்து அதைப் பிரபலமாக்கினார். இவரின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் (William Smart) அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர். 1862ம் ஆண்டு நடந்த போரில் கலந்து கொண்ட பிறகு, வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (Spokane) வில் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். இவரது மகள் சொனாராவுக்கு 16 வயது நடந்தபோது, மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். அதன்பின், ஐந்து மகன்கள் மற்றும் மகள்களுடன், மறுமணம் புரியாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். தியாகச் சுடரான தன் தந்தையைக் கெளரவிக்க வேண்டும் என்று எண்ணி, அதற்காக, சொனாரா கடுமையாக முயற்சித்தார். இறுதியில், 1972ம் ஆண்டில், அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்டு நிக்சன் அவர்கள், தந்தை தினத்தை, தேசிய நாளாக அறிவிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.

தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை. குழந்தைக்குப் புதியதோர் உலகை காட்டுபவர் அப்பா. ஒரு குழந்தையின் வாழ்வில் ஒரு தந்தையின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒவ்வொரு மனிதரும், தங்களின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளைக் கடக்க அப்பா என்ற புண்ணிய ஆத்மா, எவ்வளவு தியாகம் செய்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். தன் குடும்பம், வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் மெழுகுவர்த்தியாக உருகிப் போகின்றார். இத்தகைய தியாகச் செம்மல்களை, இறுதி வரை கண்கலங்காது, மனம் நோகாது பார்க்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. ஆனால், ஒரு தந்தை தன் மகனுக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வசதியாகத்தான்  இருக்கிறது மகனே…  நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு நீ வெளியேறியபோது,  முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டுவிட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க  இந்த இல்லத்தைத் தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில், அன்று உனக்காக  நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்,  என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்கு மனம் மகிழ்ச்சியடைகிறது. நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க  வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், படிப்பை நினைத்து உன்னைச் சந்திக்க மறுத்ததன்  எதிர்வினையே இது என இப்போது அறிகிறேன். இளம் வயதினில் நீ சிறுகச் சிறுகச்  சேமித்த  அனுபவத்தை  என் முதுமைப்  பருவத்தில், மொத்தமாக எனக்கே  செலவு செய்கிறாய். ஆயினும் உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு; நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு, வாழ்க்கை இதுதான் என. நீ கற்றுக் கொடுக்கிறாய்  எனக்கு, உறவுகள் இதுதானென்று!

இத்தகைய ஒரு மகனாக இல்லாமல், மகன் தந்தைக்காற்றும் கடமையை நிறைவேற்றுவோம். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும், அவர்கள் நீடு வாழ்வர், தங்கள் பாவங்களுக்குக் கழுவாய்த் தேடிக்கொள்கின்றனர் என்கிறது மறைநூல் (சீராக்.3:5-6)   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.