2017-06-17 14:06:00

திருத்தந்தை, ஜெர்மனியின் சான்சிலர் மெர்க்கெல் சந்திப்பு


ஜூன்,17,2017. ஜெர்மனி நாட்டின் சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் (Angela Merkel) அவர்கள், இச்சனிக்கிழமை காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், சான்சிலர் மெர்க்கெல்.

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பகம், ஜெர்மனிக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் பலனுள்ள நல்லுறவுகள் குறித்து முதலில் பேசப்பட்டதெனக் கூறியது.

பின், இவ்விரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள விவகாரங்கள் பற்றி, குறிப்பாக, Hamburgல், நடைபெறவுள்ள G20 நாடுகளின் கூட்டம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது எனக் கூறிய, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், ஏழ்மை, பசி, உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதம், காலநிலை மாற்றங்கள் ஆகிய விவகாரங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன எனவும் கூறியது. 

இன்னும், ஜெர்மனியில், இவ்வெள்ளியன்று, மரணமடைந்த சான்சிலர் ஹெல்மட் கோல் (Helmut Kohl) அவர்கள் பற்றியும், கோல் அவர்கள், ஜெர்மனி ஒன்றிணைவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் உருவாகவும் எடுத்த அயராத முயற்சிகள் பற்றியும், இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

G20 நாடுகளின் உச்சி மாநாடு, வருகிற ஜூலை 7,8 தேதிகளில், ஜெர்மனியின் Hamburg நகரில் நடைபெறவுள்ளது. G20 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.