2017-06-17 14:21:00

ஜெர்மனியின் Helmut Kohl இறப்புக்கு ஆயர்கள் இரங்கல்


ஜூன்,17,2017. ஜெர்மனி நாட்டின் முன்னாள் சான்சிலர் ஹெல்மட் கோல் அவர்கள் மரணமடைந்ததையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Reinhard Marx அவர்கள், இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹெல்மட் கோல் அவர்கள், கிறிஸ்தவத்திற்குச் சாட்சியாக விளங்கியதற்கு, ஜெர்மனித் திருஅவை நன்றி தெரிவிக்கின்றது என்றுரைக்கும் கர்தினாலின் செய்தி, சுதந்திர சமூகத்தின் விழுமியங்கள், உலகில் எங்கெல்லாம் நசுக்கப்படுகின்றனவோ, அங்கே அவை மதிக்கப்படுவதற்காகக் குரல் கொடுத்தவர் என்றும் பாராட்டியுள்ளது. 

ஹெல்மட் கோல் அவர்கள், ஐரோப்பாவில், தனது கிறிஸ்தவ பற்றுறுதியை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை அறிந்திருந்தார் மற்றும் அதை வெளிப்படுத்த விரும்பினார் எனவும், திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில், சமூகச் சந்தைப் பொருளாதாரம் அமைக்கப்பட இவர் உழைத்தார் எனவும், கர்தினால் Marx அவர்கள், தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் இணைவதற்கு, கலந்துரையாடல்களைத் திறமையாக மேற்கொள்ளும் தொலைநோக்குச் சக்தியை சான்சிலர் கோல் அவர்கள் கொண்டிருந்தார் எனவும், எல்லைகளற்ற ஒன்றிணைந்த ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார் எனவும் பாராட்டுகின்றது, கர்தினாலின் செய்தி.  

ஜூன் 16, இவ்வெள்ளியன்று, தனது 87வது வயதில் மரணமடைந்தார் ஹெல்மட் கோல். 1982ம் ஆண்டு முதல், 1998ம் ஆண்டு வரை, 16 ஆண்டுகள் ஜெர்மனியை ஆட்சி செய்த  Helmut Kohl அவர்கள், பெர்லின் சுவரின் வீழ்ச்சிக்குப் பின், 1990ம் ஆண்டில் இரு ஜெர்மனிகளும் ஒன்றிணைவதில் வெற்றி கண்டவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.