2017-06-17 14:13:00

ஜெர்மனி, ஐரோப்பாவின் ஒன்றிப்புக்கு அயராத உழைத்தவர் Kohl


ஜூன்,17,2017. ஜெர்மனி நாட்டின் முன்னாள் சான்சிலர் ஹெல்மட் கோல் (Helmut Kohl) அவர்கள் மரணமடைந்ததையொட்டி, அவரது குடும்பத்தினர், ஜெர்மனியின் தற்போதைய சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் மற்றும், அந்நாட்டு மக்களுக்கு, தன் அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சான்சிலர் மெர்க்கெல் அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்திச் செய்தியில், ஜெர்மன் மக்களால், ஒன்றிப்பின் காரணகர்த்தா என அழைக்கப்படும் கோல் அவர்களின் ஆன்மா நிறை சாந்தியடைய, தான் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாகவும், கடின நோயினாலும் துன்புற்று இறந்துள்ள சான்சிலர் கோல் அவர்கள், ஜெர்மனியிலும், ஐரோப்பாவின் அண்டை நாடுகளிலும், மக்களின் நலனுக்காக, தொலைநோக்குடன் செயல்பட்ட, மாபெரும் மற்றும், நம்பிக்கைக்குரிய ஐரோப்பிய மனிதர் எனப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மனி மற்றும், ஐரோப்பாவின் ஒன்றிப்புக்கும், அமைதி மற்றும், ஒப்புரவுக்கும்,  சான்சிலர், கோல் அவர்கள் மேற்கொண்ட அயராத உழைப்புக்கு, இரக்கமுள்ள கடவுள் வெகுமதியளிப்பாராக எனவும் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.