2017-06-17 14:27:00

ஜூன் 18 திருத்தந்தை தலைமையில் திருநற்கருணைப் பவனி


ஜூன்,17,2017.  “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, எப்போதும் ஒரு சமூக அக்கறையும்கூட. எனவே, இப்பூமி மற்றும், ஏழைகளின் அழுகுரலைக் கேட்போம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், இஞ்ஞாயிறன்று உலகெங்கும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின், திருத்தந்தை, புனித மேரி மேஜர் பசிலிக்கா வரை, திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துவார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா, உலகின் ஏறக்குறைய எல்லா  மறைமாவட்டங்களிலும் சிறப்பிக்கப்படும் ஞாயிறுக்கு முந்திய வியாழனன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்படுகின்றது. அந்நாளில், வழக்கமாக திருத்தந்தை, திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துவார். ஆனால், உரோம் மக்களின் வசதி மற்றும், போக்குவரத்திற்குத் தடங்கல் ஏற்படாத வகையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை இந்தப் பவனியை நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இஸ்ரேல் நாட்டின் மண்டல ஒத்துழைப்பு அமைச்சர் Tzachi Hanegbi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதரகம், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்களையும், Hanegbi அவர்கள் சந்தித்து உரையாடினார் எனத் தெரிவித்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.