2017-06-15 16:06:00

போபால் அருள் சகோதரி மீது பொய்யான குற்றச்சாட்டு


ஜூன்,15,2017. தகுந்த காரணம் ஏதுமின்றி, மத்தியப் பிரதேசத்தில், அருள் சகோதரி ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு, போபால் உயர் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கார்மேல் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி, பீனா ஜோசப் அவர்கள், பழங்குடியைச் சேர்ந்த நான்கு பெண்களுடன் இரயிலில் பயணம் செய்த வேளையில், தடுத்து நிறுத்தப்பட்டு, 12 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

அருள் சகோதரி பீனா ஜோசப் அவர்கள், மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற, பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதற்கு, போபால் உயர் மறைமாவட்டம் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்து அடிப்படைவாதக் குழுவான விஷ்வ இந்து பரிஷத்தின் தூண்டுதலால் இத்தகைய நடவடிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர் என்றும், இத்தகையத் துன்பங்கள் அண்மைய மாதங்களில் அடிக்கடி நிகழ்ந்துவந்தாலும், பழங்குடியினரிடையே தங்கள் பணி தொடரும் என்றும் கார்மேல் சபை துணைத் தலைவி, அருள் சகோதரி திருப்தி அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.