2017-06-14 15:38:00

மறைக்கல்வியுரை : அன்பை இலவசமாகக் கொடுப்பதிலேயே மகிழ்ச்சி


ஜூன்,14,2017. உரோம் நகரில் வெயில் காலம் ஓரளவு முழுமையாக ஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியாவைப் போன்ற கொடும் வெயிலை உணரமுடியவில்லையெனினும், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் என்றேச் சொல்லக்கூடிய அளவில், வெப்பம் தாக்கிக் கொண்டிருக்க, பெருமளவான மக்கள் திருத்தந்தையின் உரைக்குச் செவிமடுக்க தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால், நோயுற்றோருள் பலர் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருக்க, அவர்களை முதலில் சென்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'இன்று நாம் இரு இடங்களில் நம் மறைக்கல்வி உரை சந்திப்புக்களை நடத்துகிறோம். வெளியே வெப்பம் அதிகமாக இருப்பதால், நீங்கள் இங்கு அரங்கில் அமர வைக்கப்பட்டுள்ளீர்கள். இருப்பினும், பெரிய தொலைக்காட்சி திரை வழியாக, நீங்களும் வளாகத்தில் அமர்ந்திருப்போரும் இணைந்துள்ளீர்கள். திருஅவையும் இவ்வாறே, தூய ஆவியாரின் துணையோடு இணைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஒன்றிப்பில் கொணரும் தூய ஆவியாரை நோக்கிச் செபிப்போம்', என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், அவர்களோடு இணைந்து 'இயேசு கற்பித்த செபம்' மற்றும் 'அருள்நிறை மரியே' செபங்களை செபித்தபின், அரங்கில் குழுமியிருந்த அனைத்து நோயாளிகளுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். தனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறு அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்தபின், புதன் மறைக்கல்வி உரையை வழங்க தூய பேதுரு பேராலய வளாகம் நோக்கிச் சென்றார் திருத்தந்தை.

இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நோயாளர் பலர் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் அமர்ந்து, பெரிய தொலைக்காட்சி திரை வழியாக நம்மோடு இணைந்துள்ளனர் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம் என கேட்டுக்கொண்டார். இந்த மறைக்கல்வி உரையின் துவக்கத்தில், லூக்கா நற்செய்தி பிரிவு 15, வசனங்கள் 20 முதல் 24 வரை வாசிக்கப்பட்டன. காணாமற்போன மகனாக வீட்டை விட்டுச் சென்ற இளைய மகன், திருந்தி திரும்பி வந்தபோது, தந்தைக்கும் இளைய மகனுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் வாசிக்கப்பட்டபின், கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற மறைக்கல்வித் தொடரின் இப்புதன் பகுதியாக, 'அன்புகூரப்பட்ட குழந்தைகள், எதிர்நோக்கின் உறுதிப்பாடுகள்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களை, திருப்பயணிகளோடு பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்குக் குறித்த நம், கடவுள் மீதான முன்நிபந்தனையற்ற அன்பிலும்,  இறைமகனின் வருகையில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளவைகள், மற்றும், தூய ஆவியாரின் கொடைகளிலும், கிறிஸ்தவ  எதிர்நோக்கின் ஆதாரத்தை, நம் அண்மைக்கால  மறைக்கல்வி தொடர் வழியாகக் கண்டுள்ளோம், என  தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பின்றி நம்மில் எவராலும் வாழ முடியாது. அன்பைத் தெரிந்துகொண்டு, அதனை இலவசமாகக் கொடுப்பதிலும், பெறுவதிலும் கிட்டும் அனுபவத்திலிருந்தே மகிழ்ச்சி பிறக்கிறது. நமக்காக நம்மை எவரும் அன்புகூரவில்லை, என்ற உணர்வே இவ்வுலகில், பலவேளைகளில் மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக அமைகின்றது. எல்லையற்ற அன்பால் கடவுள் நம்மை அன்புகூர்கிறார் என்றால், அது நம் சிறப்புத் தகுதிகளால் அல்ல, மாறாக அவரின் நன்மைத்தனத்தினாலேயே என்பதை, நம் விசுவாசம் நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் அவரைவிட்டு விலகிச் சென்றாலும், காணாமற்போன மகன் உவமையில் வரும் இரக்கம் நிறைந்த தந்தையைப்போல், அவர் நம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார். விலகிச் சென்ற நமக்கு, அவர் மன்னிப்பை வழங்கி, நம்மை அரவணைத்து ஏற்றுக் கொள்கிறார். தூய பவுலின் வார்த்தைகளில் பார்த்தோமானால், 'நாம் பாவிகளாக இருந்தபோதே, கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்'(உரோ. 5:8). நாம், நம் இறைத்தந்தையின் அன்புநிறை புதல்வர்களாகவும் புதல்வியராகவும் மாறும்பொருட்டு, இயேசுத் தம் உயிரைக் கையளித்தார். இயேசுவின் உயிர்ப்பு, மற்றும் தூய ஆவியாரின் அருள்கொடை வழியாக, நாம், இறைவனுக்கேயுரிய அன்பு வாழ்வில் பங்குதாரராக மாறுகிறோம். கடவுளுடைய அரவணைப்பில் நாம் அனைவரும், புதிய வாழ்வையும் விடுதலையையும் கண்டுகொள்வோமாக. ஏனெனில், அவருடைய அன்பே, நம் நம்பிக்கையின் ஆதாரம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை, இறையன்பை மையமாக வைத்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.