2017-06-14 15:49:00

பாசமுள்ள பார்வையில்: கொலைகாரன், தாய் மடிமீது ஆறுதல் தேடுவானா


தாயின்மடிதான் உலகம். உலகின் வளங்கள் அனைத்தும் தரமுடியாத ஆறுதலை, அந்த மடியில் கண்டுகொள்ளலாம். தாலாட்டுவதில் இருந்து, மரணத்தில்கூட, தன் மடி கிடத்தியே அளவிடமுடியாத பாசத்தை வெளிப்படுத்திய தாய் மரியாவைத்தான், மிக்கேலாஞ்சலோ அவர்களும், 'பியெத்தா' என்ற சிற்பத்தின் வழியாகக் காட்டியுள்ளார்.

முகுந்தனுக்கு அன்று, பொழுது, நல்லபடியாக விடியவில்லை. காலையில், தெருமுனைக்கு பால் வாங்கச் சென்றவன், வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணம் ஒன்றைப் பார்த்து அலறினான். பின், பால் வாங்காமலேயே வீடு திரும்பினான். தன் தாயிடம், தான் கண்டதைச் சொல்லிவிட்டு, அந்த 24 வயது மகன், அத்தாயின் மடியிலேயே தலைவைத்துப் படுத்து, நடுங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காவல்துறை அவன் வீட்டிற்கு வந்தது. கொலையுண்ட இடத்திலிருந்து இவன் ஓடியதை யாரோ பார்த்ததாகக் கூறியதால்,  விசாரணைக்கு வந்தது காவல்துறை. தாய் மடி மீது படுத்து நடுங்கிக் கொண்டிருந்த முகுந்தனைப் பார்த்ததும், காவல்துறை ஆணையர், 'எவனும் கொலைச் செய்துவிட்டு வந்து, தாய்மடிமீது படுத்து ஆறுதல் தேடமாட்டான். தாய்ப்பாசம் உள்ளவன், கொலைச் செய்யத் துணிவது அரிது' என்றுரைத்தார். பின், அவனை ஆறுதல்படுத்தி, விவரங்களை மட்டும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.