2017-06-13 15:24:00

ஏழைகளை அரவணைப்பதை வலியுறுத்தும் உலக நாள்


ஜூன்,13,2017. 'வார்த்தைகளால் அல்ல, மாறாக வாழ்வு நடவடிக்கைகளால் அன்புகூர்வோம்' என்ற கருத்தை மையப்பொருளாக வைத்து, முதல் உலக வறியோர் நாளுக்குரிய செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறை இரக்கத்தின் ஆண்டை நிறைவுசெய்த வேளையில், உலக வறியோர் நாள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள முதல் உலக நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், இயேசு நம்மை அன்புகூர்வதுபோல் பிறரையும் அன்புகூர முயலும் நாம், ஏழைகளிடம் அன்புகூர்வதற்கு, இயேசுவையே முன்மாதிரியாக கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏழையின் கூக்குரலுக்கு இறைவன் செவியுற்றார், என்ற 34ம் திருப்பாடலின் வரிகளை, தன் செய்தியில் எடுத்தியம்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஏழைகளிடையே  பணியாற்றுவதற்கு ஏழுபேர் கொண்ட குழுவை, தூய பேதுரு உருவாக்கியது குறித்தும் திருத்தூதர் பணி நூலிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

இயேசுவின் சீடனாயிருப்பது என்பது, ஏழைகளோடு சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாகும் என்பதை, தொடக்ககால கிறிஸ்தவ சமூகம் அறிந்தே இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் மற்றும் பல்வேறு புனிதர்கள் கடந்த நூற்றாண்டுகளில் விட்டுச் சென்றுள்ள எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழுநோயாளர்களைக் கட்டியணைத்து, அவர்களுக்குப் பொருளுதவிகளை வழங்குவதில் மட்டும் புனித பிரான்சிஸ் நிறைவு காணவில்லை, மாறாக, அவர்களோடு சென்று வாழ்ந்த அந்தச் செயல், அவரின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்தது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பிறரன்புப் பணிகள் மற்றும் பகிர்தலை நாம் மேற்கொள்ளும்போது, அதைப் பெறுபவரிலும், அவர் முகத்திலும் இறைவனைக் காணமுடியும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நவீன உலகில், ஏழ்மையை அதன் முழு வடிவத்திலேயே காண்பது சிரமம் எனினும்,  துன்ப துயரங்கள், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்படும் நிலை, அடக்குமுறை, வன்முறை, துன்புறுத்தலும் சிறையிலடைத்தலும், போர், கருத்துச் சுதந்திரமின்மை, மாண்பு மதிக்கப்படாமை, அறியாமை, கல்வியறிவின்மை, மருத்துவ வசதியின்மை, வேலையின்மை, ஆள்கடத்தல், அடிமைத்தனம், நாடுகடத்தல், மிகக் கொடிய வறுமை நிலை, கட்டாயக் குடிபெயர்வு போன்றவைகளில் ஏழ்மையின் பாதிப்புக்களைக் காணமுடியும் என உரைத்துள்ளார்.

ஏழைகளுக்கு உதவும் கைகள் பேறுபெற்றவை எனவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பிறரை ஒடுக்கி வைத்தல் மற்றும், பொருள்களை வீணாக்குதல் என்ற கலாச்சாரத்திற்கு எதிராக விசுவாசிகள் செயல்பட்டு, சந்திப்பு கலாச்சாரத்தை ஆரத்தழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இந்த ஏழைகளுக்கான உலக நாள் எனவும், தன் செய்தியில் இறுதியாகக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.