2017-06-12 17:16:00

மூவொரு கடவுளின் ஒன்றிப்பின் சாயலாக செயல்படும் மனிதகுலம்


ஜூன்,12,2017. கிறிஸ்தவ சமூகமானது தனக்குள்ள அனைத்துக் குறைபாடுகளையும் தாண்டி, தன் நன்மைத்தனம் மற்றும் அழகின் வழியாக, மூவொரு கடவுள் ஒன்றிப்பின் சாயலில் இருக்க முடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூவொரு கடவுள் திருவிழாவான இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவொரு கடவுளின் ஒன்றிப்பின் சாயலாக மனிதகுலம் இருக்க வேண்டுமெனில், அது, இறைவனின் இரக்கம், மற்றும், மன்னிப்பு அனுபவத்தின் வழியாகச் செல்லவேண்டும் எனவும் கூறினார்.

முடிவற்ற வாழ்வு என்பது, சிலுவையில் இயேசு வழங்கிய இறையன்பு எனும் அளவிடமுடியாத கொடையாகும் எனவும் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் துணையோடு இந்த அன்பானது, நமக்கு ஒரு புது ஒளியைத் தந்து நம்மை தீயவற்றிலிருந்து காக்கிறது எனவும் கூறினார்.

‘மகிழ்ச்சியாயிருங்கள், உங்கள் நடத்தையை சீர்படுத்துங்கள், மன ஒற்றுமை கொண்டிருங்கள், அமைதியுடன் வாழுங்கள்’ என இஞ்ஞாயிறு முதல் வாசகத்தில் தூய பவுல் கூறும் வார்த்தைகளை எடுத்தியம்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இரக்கம் மற்றும் மன்னிப்பின் அனுபவங்களுக்கு தூய பவுலே சாட்சி பகர்கிறார் எனவும் உரைத்தார்.

இயேசுவுடன் நிக்கதேமு நடத்திய உரையாடல் குறித்து இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முடிவற்ற வாழ்வு குறித்து இயேசு இங்கு எடுத்துரைத்தது, சிலுவை வழியாக கடவுள் வழங்கிய அளவிட முடியாத அன்பை பற்றியதேயாகும் எனவும் கூறினார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இச்சனிக்கிழமையன்று, இத்தாலியின் La Spezia எனுமிடத்தில், இறையடியார் Itala Mela அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

விசுவாச வாழ்விலிருந்து விலகி நின்ற ஒரு குடும்பத்தில், அதுவும், இளவயதில், நாத்திகராக வாழ்ந்துவந்த Itala Mela  அவர்கள், ஓர் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்திற்குப்பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க கல்வியாளராகி, புனித பெனடிக்ட் துறவு வழியைப் பின்பற்றிய இந்தப் புதிய அருளாளர், மூவொரு கடவுள் மறையுண்மையை மையமாக வைத்து, தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.