2017-06-12 17:30:00

சிறார்களின் நம்பிக்கையையும் வருங்காலத்தையும் தகர்க்காதீர்


ஜூன்,12,2017. பெற்றோரின் துணையின்றி, வேறு இடங்களில் குடிபெயர்ந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சிறார்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார், ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் இவான் யுர்கோவிச் (Ivan Jurkovic).

'எவரின் துணையுமின்றி குடிபெயர்ந்து பணிபுரியும் சிறார்களும், மனித உரிமைகளும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற, மனித உரிமைகள் அவையின் 35வது அமர்வில் உரையாற்றிய பேராயர் யுர்கோவிச் அவர்கள், இளந்தொழிலாளர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படாதபோது அவர்களின் நம்பிக்கைகளும் வருங்காலமும் தகர்க்கப்படுகின்றன என்ற கவலையை வெளியிட்டார்.

குடிபெயரும் சிறார்களுக்கு போதிய மருத்துவ வசதிகளும், கல்வி வசதிகளும் இல்லாத நிலையில், அவர்கள் ஆள்கடத்தலுக்கும், பாலியல் தொழிலுக்கும் உள்ளாக்கப்படும் வாய்ப்புக்களையும் சுட்டிக்காட்டினார் பேராயர் யுர்கோவிச்.

குழந்தைகள் குடிபெயர்வதற்கான மூல காரணங்கள் ஆராயப்பட்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அழைப்புவிடுத்த பேராயர் யுர்கோவிச் அவர்கள், ஒவ்வொருவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டியது, இதற்கான முதல்படி என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.