2017-06-09 15:33:00

பாசமுள்ள பார்வையில் : தூணிலுமிருப்பார், துரும்பிலுமிருப்பார்


ஆண்டவனிடம் ஓர் அருள் வேண்டி, காடு, கடல் தாண்டி ஒரு மலை உச்சிக்குச் சென்றார் பக்தர் ஒருவர். பல ஆண்டுகள் தவம் செய்தபின் ஒருநாள் கடவுளும் நேரில் தோன்றினார். கண்டவுடன் பக்தர் கடவுளை நோக்கி, 'தூணிலும் இருப்பாய், துரும்பிலும் இருப்பாய் என்றும், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருவாய் என்றும்  சொல்கிறார்களே, ஆனால், நீயோ என்னை இத்தனை தூரம் வரவைத்து, அதுவும் இத்தனை ஆண்டுகள் காக்க வைத்து காட்சி தருகிறாயே' என்று கேட்டார். கடவுள், பக்தரைப் பார்த்து, 'பிள்ளை வரம் வேண்டி காத்திருந்து, உன்னை பத்து மாதம் சுமந்து, உனக்கு அரணாகவும், தூக்கிப் பிடிக்கும் தூணாகவும், உன் நலனையே எண்ணி இளைத்துப்போன துரும்பாகவும் மாறிப்போன நான், பாலகனாய் நீ தூங்கியபோது உன் சிறு சலனத்தில்கூட கண்விழித்து ஓடி வந்தேனே, எப்போதாவது நான் உன்னிடம் இதற்கெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறேனா?' என்று புன்னகையோடு கேட்டார். உள்பொருளை புரிந்துகொள்ளமுடியாத பக்தர் கடவுளை நோக்கி, 'இறைவா! என் அருகிருந்து என் தாய் செய்ததையெல்லாம், நீ செய்ததாக கூறுகிறாயே, இது என்ன நியாயம்?' என்று கேள்வி எழுப்பினார். கடவுளோ, அதே புன்னகை மாறாமல், 'உண்மைதான். துரும்பிலேயே இருக்க முடிந்த என்னால், உன் தாய்க்குள், தாயாக இருக்க முடியாதா? அதை விட்டுவிட்டு, தூணிலும், துரும்பிலும் நான் இருப்பதால், உனக்கு என்ன பயன்? தாயில் சிறந்த கோவிலுமில்லை என்று சொல்லும் உங்களுக்கு, இறைவன், கோவிலில் வாழ்வான் என்பது கூடவா தெரியாது' என்று முடித்தார். தாய் என்பவர் கோவிலா, தெய்வமா என வீடு நோக்கி நடந்துகொண்டே சிந்தித்தார் பக்தர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.