2017-06-09 15:39:00

திருத்தந்தை : துயரங்களில் இறைவன் அருகே வருவதை உணர்வதே அழகு


ஜூன்,09,2017. துயரங்கள் சூழும் மிகக் கடினமான நேரங்களிலும், பிறரது ஏளனங்களுக்கு உள்ளாகும் நேரங்களிலும், பொறுமையோடும், நம்பிக்கையோடும் இறைவனிடம் செபிக்கும் வழிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, தோபித்து நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தோபித்து, அன்னா, தோபியா, சாரா ஆகிய அனைவரும் இன்ப துன்பங்களை ஏற்றுக்கொண்ட முறையைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்ல, அழகிய நேரங்கள் மற்றும் கடினமான நேரங்கள் அனைத்திலும் அவர்கள் இறைவனைப் போற்றி வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.

வாழ்வில் வரும் அழகான நேரங்கள் என்றால், அவை, வெளிப்புறமாக, முக ஒப்பனை செய்யப்பட்ட நேரங்கள் அல்ல என்பதை, தன் மறையுரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, நமது கடினமானச் சூழல்களில் இறைவன் நம் அருகே வருவதை நாம் உணர்வதே அழகான நேரங்கள் என்று எடுத்துரைத்தார்.

மேலும், "கிறிஸ்து என்ற மறையுடலின் வாழும் உறுப்பினர்களாக விளங்கும் நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் உழைக்க அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.