2017-06-09 16:04:00

குடும்பங்களிலும், சமுதாயத்திலும் சிறந்த ஆசிரியர்கள், பெண்கள்


ஜூன்,09,2017. உடன்பிறந்த உணர்வு, அமைதி என்ற பாதையில் பயணம் செய்யும்போது, பல தடைகளையும், பிரச்சனைகளையும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் உறுப்பினர்களிடம் கூறினார்.

தங்கள் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட பல் சமய திருப்பீட அவையின் உறுப்பினர்களை இவ்வெள்ளி மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, "உலகளாவிய உடன்பிறந்த உணர்வைக் கற்றுத் தருவதில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பெண்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு அநீதிகளின் காரணமாக, கற்பிக்கும் ஆசிரியர்களாக அவர்களை நோக்கும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, வன்முறைகளின் பல வடிவங்களுக்கு பெண்கள் எளிதான இலக்காக மாறுகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.

குடும்பங்களிலும், சமுதாயத்திலும் சிறந்த விழுமியங்களை சொல்லித்தரும் ஆசிரியர்களாகப் பணியாற்றக்கூடியவர்கள் பெண்கள் என்பது உண்மையென்றாலும், வன்முறைகளால் குடும்பங்கள் சிதைக்கப்படும்போது, பெண்களின் ஆசிரியப் பணியும் சிதைக்கப்படுகின்றது என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் பங்கை அங்கீகரித்தல், உடன்பிறந்த உணர்வைப் புகட்டுதல், உரையாடலை வளர்த்தல் என்ற மூன்று கருத்துக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையைப் பகிர்ந்துகொண்டார்.

சொல்லொண்ணா துயரங்கள் நடுவிலும், சமுதாய முன்னேற்றத்திற்காக, உலகெங்கும் பெண்கள் ஆற்றிவரும் பங்கை நாம் பெருமையுடன் அங்கீகரிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் உறுப்பினர்களிடம் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.