2017-06-09 16:11:00

கிறிஸ்தவ மறையின் நாடித்துடிப்பு, அடுத்தவர் மீது அக்கறை


ஜூன்,09,2017. ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்லாமல், உலக சமுதாயத்தையே கலங்க வைக்கும் குடிபெயர்வோர் பிரச்சனைக்கு ஐரோப்பிய சமுதாயம் இன்னும் அதிகமாக பதிலிருப்பை வழங்க கடமைப்பட்டுள்ளது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறினார்.

"ஐரோப்பிய சுய அடையாளத்திற்கு சவாலாக விளங்கும் குடிபெயர்தல்" என்ற தலைப்பில், ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்கள், உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இனவெறி, அடக்குமுறை, விலக்கிவைத்தல் போன்ற சமுதாய தீமைகளுக்கு எதிராக நல்வழி காட்டவேண்டிய ஐரோப்பிய சமுதாயம், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ அழைக்கப்பட்டுள்ளது என்று, கான்ஸ்டான்டினோபிள் தலைமை ஆயரான பார்த்தலோமேயு அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

அயலவரை ஓர் ஆபத்தென்று நோக்கும் கண்ணோட்டத்திலிருந்து விடுதலை பெற்று, அனைத்து இனத்தவரையும் நம் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக நோக்கும் பரந்த உள்ளத்தை ஐரோப்பிய சமுதாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, லெஸ்போஸ் தீவில், புலம்பெயர்ந்தோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பேராயர் ஏரோனிமோஸ் ஆகியோருடன்  தான் மேற்கொண்ட ஒரு சந்திப்பை தன் உரையில் நினைவுகூர்ந்த முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்கள், கிறிஸ்தவ மறையின் நாடித்துடிப்பாக விளங்குவது, அடுத்தவர் மீது காட்டும் அக்கறை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.