2017-06-08 14:30:00

ஈராக் நாட்டு கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு


ஜூன்,08,2017. ஈராக் நாட்டின் பழம்பெரும் கையெழுத்துப் பிரதிகளைப்பற்றிய கண்காட்சி, அந்நாட்டின் செறிவுமிக்க கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு என்று, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.

உரோம் நகரில், ஜூன் 10 இச்சனிக்கிழமை முதல், 17 அடுத்த சனிக்கிழமை முடிய 'ஈராக் கையெழுத்துப் பிரதிகளின் உன்னத நேரம்' என்ற தலைப்பில், ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாளிதழ், "L'Osservatore Romano"வில், இக்கண்காட்சியைக் குறித்து, கர்தினால் சாந்திரி அவர்கள், ஜூன் 8, இவ்வியாழனன்று, வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, நமக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசு என்ற அடிப்படைவாதக் குழுவினர் ஈராக் நாட்டில் பழம்பெரும் கருவூலங்களை அழித்து வந்த வேளையில், அந்நாட்டில் பணியாற்றிவரும் தொமினிக்கன் துறவு சபையினர், கரக்கோஷ், எர்பில் ஆகிய நகரங்களிலிருந்து காப்பாற்றிய பழம்பெரும் கையெழுத்துப் படிவங்கள், இக்கண்காட்சியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 9, இவ்வெள்ளியன்று மாலை நடைபெறும் கண்காட்சியின் ஆரம்ப விழா நிகழ்வில், கர்தினால் சாந்திரி அவர்களும், பிரான்ஸ் நாட்டுத் தூதர் பிலிப் செல்லெர் (Philippe Zeller) அவர்களும் பங்கேற்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.