2017-06-06 14:23:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 23


யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் எழுதியுள்ள 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, நம் விவிலியத் தேடலில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறோம். இந்நூலின் 7ம் பிரிவுக்கு குஷ்னர் அவர்கள் அளித்துள்ள தலைப்பு : "ஒரு குழப்பம், ஒரு புதிர், ஓர் ஆச்சரியமான உச்சக்கட்டம்" (A Confusion, a Perplexity, and a Surprising Climax). இப்பிரிவில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழும் மூன்றாவது சுற்று உரையாடல் பற்றி விளக்கம் அளித்துள்ளார், குஷ்னர்.

யோபு நூல் 22ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, மூன்றாவது சுற்று உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுற்றில், யோபின் நண்பர்களான எலிப்பாசும், பில்தாதும் மட்டுமே பேசுகின்றனர். மூன்றாவது நண்பர் சோப்பார் எதுவும் பேசவில்லை. 22ம் பிரிவில் எலிப்பாசு பேசி முடித்தபின், யோபு அளித்த பதில்மொழி, 23, 24 ஆகிய இரு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25ம் பிரிவில், பில்தாது பேசுவது, 6 இறைச்சொற்றொடர்களில் இடம்பெற்றுள்ளது. யோபு நூலில் காணப்படும் 42 பிரிவுகளில், இப்பிரிவே மிகக் குறுகிய பிரிவாகும். இதற்கு, யோபு கூறும் பதிலுரை, 26 முதல், 31 முடிய, 6 பிரிவுகளில் மிக நீண்டதாக அமைந்துள்ளது. மூன்றாவது சுற்று உரையாடலில் குழப்பமும், புதிரும் கூடுகின்றன என்ற எச்சரிக்கையை குஷ்னர்  அவர்கள், தன் நூலின் 7ம் பிரிவின் ஆரம்பத்தில் குறிப்பிடுகிறார்.

முதல் இரு சுற்று உரையாடல்களில், யோபு மீது, நண்பர்கள் கொண்டிருந்த மரியாதை சிறிது சிறிதாகக் குறைந்து வந்ததை உணர்ந்தோம். அதன் உச்சக்கட்டமாக, 3வது சுற்றின் துவக்கத்தில், எலிப்பாசு, யோபை நேருக்கு நேர் தாக்குவதைக் காண்கிறோம். யோபு, தன் வாழ்வில், குற்றம் ஒன்றையே புரிந்துள்ளார் என்ற பாணியில், எலிப்பாசு, அவர் மீது, குற்றச்சாட்டுகளைக் குவித்து வைக்கிறார்:

யோபு நூல் 22: 5-7,9

உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா? ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்! தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை... விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

எலிப்பாசு குவித்துவைக்கும் இப்பட்டியலில், இருவகையானக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தேவையில் இருப்போருக்குச் செய்யத் தவறிய கடமைகள், மற்றும், தேவையில் இருப்போரை கூடுதலாக வதைத்தக் கொடுமைகள் என்று இருவகையானக் குற்றச்சாட்டுகளை எலிப்பாசு முன்வைக்கிறார்.

"தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை" (யோபு 22:7) என்பதை, கடமை தவறியக் குற்றமாக எலிப்பாசு கூறுகிறார். இவ்வரிகளைக் கேட்கும்போது, நற்செய்தியாளர் மத்தேயு சித்திரிக்கும் இறுதித் தீர்வை காட்சி நினைவுக்கு வருகிறது. இறுதித் தீர்வையில் நம்மைத் தீர்ப்பிடவரும் அரசர், நம்மை 'ஆசி பெற்றவர்கள்' என்று அழைத்துச் செல்வதற்கும், 'சபிக்கப்பட்டவர்கள்' என்று விரட்டியடிப்பதற்கும், பயன்படுத்தும் அளவுகோல்களில் ஒன்று இதோ:

மத்தேயு 25: 35,42

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;... ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்" என்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்... ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை" என்பார்.

பசித்தவருக்கு உணவு தருதல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருதல் என்ற கடமைகளில் தவறும்போது, அது இறுதித் தீர்விலும் கணக்கில் எடுக்கப்படும் என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஓர் எச்சரிக்கை. பசித்தவருக்கு உணவளிப்பது, தாகமுற்றோருக்கு தண்ணீர் தருவது என்ற நற்செயல்களை, அனைத்து உண்மையான மதங்களும் பரிந்துரைக்கின்றன.

தேவையில் இருப்போரை யோபு வதைத்தார் என்ற இரண்டாவது வகைக் குற்றச்சாட்டைக் கூறும் எலிப்பாசு, குறிப்பாக, விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார்: விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; அனாதைகளின் கைகளை முறித்துப்போட்டீர். (யோபு 22:9)

மோசே வழங்கிய சட்டங்களில், கைம்பெண்கள், அன்னியர், அனாதைகள் சார்பில், இறைவன், எப்போதும் இருப்பவர் என்பது, தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

இணைச்சட்டம் 10:17-19

உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

"அனாதைகளின் கைகளை முறித்துப்போட்டீர்" என்று எலிப்பாசு கூறும் குற்றச்சாட்டு, தொன்று தொட்டு நிகழும் ஒரு கொடூரத்தை நம் நினைவுக்குக் கொணர்கிறது. வேறு யாரையும் நம்பி வாழமுடியாத அனாதைகள், தங்கள் கரங்களை நம்பி வாழமுடியும். ஆனால், அதையும் அவர்களிடமிருந்து பறித்துவிடும் கொடுமை, மனித வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. உலக அதிசயங்களாகக் கருதப்படும் அழகிய நினைவுச் சின்னங்களை உருவாக்கிய உழைப்பாளர்களின் கரங்கள் உடைக்கப்பட்டதையும், வெட்டப்பட்டதையும் பாரம்பரியக் கதைகளாக நாம் கேட்டிருக்கிறோம். இது உண்மையா, இல்லையா என்பதை அறிய வாய்ப்பில்லை. ஆனால், இன்று நடக்கும் ஒரு கொடுமை, இதையொத்தது. பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் கடத்தப்பட்டு, பிச்சையெடுக்கும் தொழிலில் புகுத்தப்படும்போது, அவர்களது கண்களைக் குருடாக்குதல், கை, கால்களை உடைத்து ஊனமாக்குதல் போன்ற மிகக் கொடிய குற்றங்கள் நிகழ்வது, வேதனைதரும் உண்மை.

யோபு மீது சுமத்தியக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இறைவனிடம் அவர் திரும்பிவந்தால் நிகழும் நன்மைகளை, எலிப்பாசு எடுத்துரைக்கிறார். " நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்" (யோபு 22:23) என்று கூறும் எலிப்பாசு, யோபு திரட்டிவைத்திருக்கும் போன், தங்கம், வெள்ளி ஆகியவற்றை அவர் வீசி எறியவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

யோபு 22: 24,25

தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்! பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்! எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

இவ்வரிகளைக் கேட்கும்போது, போன், தங்கம், வைரம் இவற்றை பல்வேறு வடிவங்களில் திரட்டிவைக்கும், அல்லது, பகட்டாகப் பயன்படுத்தும் உலகத் தலைவர்கள், செல்வந்தர்கள் ஆகியோரை வேதனையோடு நினைவுகூருகிறோம்.

தங்க, வைர ஆபரணங்கள் செய்வதில் திறமைமிக்க Stuart Hughes என்பவர், 2013ம் ஆண்டு, உருவாக்கிய ஒரு iPhoneன் விலை, 1 கோடியே, 53 இலட்சம் டாலர்கள் - அதாவது, 98 கோடியே, 40 இலட்சம் ரூபாய். தங்கத்தால் செய்யப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்ட இந்தத் தொலைப்பேசியை, பெயர் வெளியிட விரும்பாத ஒரு சீன வர்த்தகர் வாங்கினார் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

இதேபோல், தங்கம், வைரம் கொண்டு உருவாக்கப்படும் உடைகள், காலணிகள், பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம். பல தலைவர்களின் இல்லங்களில், அவர்கள் குளிக்கும் தொட்டிகள், பயன்படுத்தும் கழிவறை இருக்கைகள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை என்று கேள்விப்படும்போது, அவர்கள் எவ்வளவு தூரம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்பதை எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம்.

யோபு, இறைவனிடம் திரும்பிவந்தால், இறைவன் என்ன செய்வார் என்பதை, 22ம் பிரிவின் இறுதியில் எலிப்பாசு இவ்வாறு கூறுகிறார்.

யோபு 22: 26-29

அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.  நீர் அவரிடம் மன்றாடுவீர்; அவரும் உமக்குச் செவி கொடுப்பார். நீர் நினைப்பது கைகூடும்; உம் வழிகள் ஒளிமயமாகும். ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.

இவ்வரிகளைக் கேட்கும்போது, அன்னை மரியா பாடிய புகழ்ப்பாடல் நினைவில் எழுகிறது:

லூக்கா 1: 50-53

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்... உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

எலிப்பாசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கும் யோபு கூறிய பதிலுரையில் நம் தேடலை அடுத்தவாரம் தொடர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.