2017-06-06 16:19:00

திருத்தந்தை: வெளிவேடம் என்பது சமூகங்களைக் கொலை செய்கிறது


ஜூன்,06,2017. வெளிவேடம் என்பது இயேசுவின் மொழியல்ல என்பதால், அது, கிறிஸ்தவர்களின் மொழியாகவும் இருக்க முடியாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, இச்செவ்வாய்க்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிவேடம் என்பது சமூகங்களை கொல்லும் ஒன்று, என உரைத்த திருத்தந்தை, 'வெளிவேடக்காரரே' என்ற வார்த்தையை, இயேசு, பலமுறை, சட்ட வல்லுனர்களை நோக்கிப் பயன்படுத்தியுள்ளார், ஏனெனில், அவர்கள் கண்ணோட்டம் ஒன்றாகவும், எண்ணங்கள் வேறாகவுமிருந்தன என்று கூறினார்.

வெளிவேடம் என்பதற்கு நேர் எதிரான உண்மைத் தன்மைகளை பார்க்க, இயேசு நம்மை அழைக்கிறார் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  செவ்வாயன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியில் 'சீசருடையதை சீசருக்கும், கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு கூறிய வார்த்தைகளை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

தன்னை சிக்க வைக்க நினைத்த பரிசேயர்களின் தூதர்களிடம் இயேசு, ஒரு தெனாரியத்தைக் கொண்டுவர வைத்து, அதைக் காண்பித்து உண்மை நிலையை நேரடியாக பார்க்க வைத்ததைச் சுட்டிகாட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிவேடக்காரர்களின் இரட்டை முகம் இயேசுவால் இங்கு தெளிவாக வெளிக்கொணரப்பட்டது என்றார்.

வெளிவேடக்காரர்களின் வார்த்தைகள் ஏமாற்றத்தைக் கொணர்பவை என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் வீண்புகழ்ச்சியை வழங்கி, பின்னர் மக்களை அழிவுக்கு இட்டுச்செல்லும் இவ்வார்த்தைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஏவாளிடம் பாம்பு பேசிய வார்த்தைகளை நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.