2017-06-05 15:20:00

துன்புறுபவரோடு இணைந்து துன்புறுவதே, கருணையின் செயல்


ஜூன்,05,2017. கருணையின் செயல்பாடுகள் என்பவை, நம் மனச்சான்றை சமாதானப்படுத்துபவைகளாக அல்ல, மாறாக, மற்றவர்களின் துன்பங்களை பகிர்பவைகளாகவும் அதில் பங்குபெறுபவைகளாகவும் இருக்கவேண்டும் என இத்திங்களன்று மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்களன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தோபித்து நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தையொட்டி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாடு கடத்தப்பட்ட யூதர்களுக்கு, தோபித்து ஆற்றிய பணிகள், தன்னிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்வதாக மட்டும் இல்லை, மாறாக அவர்களின் துன்பங்களை தனதாக்கி, அவர்களோடு பகிர்வதை, குறிப்பதாக உள்ளது என்றார் திருத்தந்தை. 

ஒருவரின் மனச்சான்றை சாந்தப்படுத்துவதற்காக ஆற்றுவதல்ல, கருணையின் செயல், மாறாக, துன்புறுபவரோடு இணைந்து துன்புறுவதே, உண்மையான கருணையின் செயல் என்றார் திருத்தந்தை.

தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்த தோபித்து, மற்றவர்களின் துன்பங்களில் பங்குகொண்டதோடு, மற்றவர்களுக்கு உதவுவது ஆபத்து நிறைந்தது என்பதை அறிந்திருந்தும் துணிந்து செயல்பட்டார் என்ற திருத்தந்தை, யூதர்களை, சாவிலிருந்து காப்பாற்ற திருத்தந்தை 12ம் பயஸ் உட்பட எண்ணற்றோர் பல்வேறு ஆபத்து நிறைந்த செயல்களை ஆற்றினர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நோயுற்றிருக்கும் நண்பரை சந்திக்க விருப்பமின்றி, தொலைக்காட்சி முன் நேரத்தைச் செலவிடும் இன்றையை மனித குலம், நமக்காக சுகங்களை விட்டுக்கொடுத்து, துன்பங்களை அனுபவித்து சிலுவை மரணம் வரைச் சென்ற இயேசுவை நினைத்துப் பார்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.