2017-06-03 15:17:00

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிறாருடன் திருத்தந்தை


ஜூன்,03,2017. கடந்த ஆண்டில் இத்தாலியின் Umbria, Lazio, Marche ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறாரை, இச்சனிக்கிழமை நண்பகலில், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திற்கு அருகிலுள்ள அறையில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட கலாச்சார அவை, புறவினத்தாரின் மன்றம் என்ற நடவடிக்கையின் கீழ், இத்தாலிய இரயில் துறையின் உதவியுடன், ஏறக்குறைய 200 சிறாரை, வத்திக்கானுக்கு இரயிலில் அழைத்து வந்து, திருத்தந்தையுடன் இச்சந்திப்பை ஏற்பாடு செய்தது.

இச்சிறாரிடம் கேள்விகள் கேட்டு, அவர்களுக்கு ஓரிரு வரிகளில் பதில் கூறியத் திருத்தந்தை, நிலநடுக்கத்தில் நமக்குக் கிடைத்துள்ள நல்ல காரியங்களுக்கு அன்னை மரியாவுக்கு நன்றி சொல்வோம் என்றார்.

இயேசுவுக்கு மிகவும் விருப்பமான வார்த்தைகளில், மிக்க நன்றி என்பது ஒன்று எனவும், இந்தச் சந்திப்பிற்கு, சிறாருக்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.

சிறார் இரயில்  என்ற பெயரில், கடந்த சில ஆண்டுகளாக, சிறார் வத்திக்கானுக்கு இரயிலில் அழைத்துவரப்பட்டு திருத்தந்தையைச் சந்தித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.