2017-06-03 15:44:00

நாட்டுப் பற்றுக்குமுன் கத்தோலிக்க விசுவாசத்தை முன்னிறுத்த..


ஜூன்,03,2017. உலகம் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் களைவதற்கு எடுக்கும் முயற்சிகளில், உண்மையான கத்தோலிக்க உணர்வில், திறந்த மனதுடனும், முழு விருப்பத்துடனும் ஈடுபடுமாறு, உலகளாவிய கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், கத்தோலிக்கர் தங்கள் நாட்டின், அல்லது தாங்கள் வாழும் பகுதியின் தனித்துவத்தில் கவனம் செலுத்தும்போது, அவர்கள் முதலில் தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை முன்னிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற கத்தோலிக்கருக்கு இவ்வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்த கர்தினால் டர்க்சன் அவர்கள், கத்தோலிக்கர் தங்களின் விசுவாசத்தைவிட, இந்த நாட்டினர், இந்தப் பகுதியினர் என அடையாளப்படுத்தும்போது, மிக முக்கியமான கூறுகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

மேலும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடியேற்றதாரர் மத்தியில் பணியாற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேற்கத்திய உலகில், அண்மைக் காலங்களில், சுயத்தை மையப்படுத்தும் போக்கு ஊக்குவிக்கப்படுகின்றது என்றும், இந்நிலை, உலகளாவிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து திசை திருப்பக் கூடும் என்றும் குறை கூறினார், பேராயர் தொமாசி.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.