2017-06-03 13:56:00

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாளான இன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவுக்கு ‘பெந்தக்கோஸ்து’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். கடந்த ஐம்பது நாட்களில், பல விழா நாட்கள் தொடர்ந்து வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று... வரிசையாக, நாம் பல விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இனிவரும் நாட்களிலும், மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா, இயேசுவின் திருஇருதயத் திருவிழா... என்று, விழாக்கள் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம், என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

உலக விழாக்களில், பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம், இவையே, கொண்டாட்டங்களின் இலக்கணமாகத் திகழ்கின்றன. இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரான உண்மைகள். இந்த மறையுண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.

‘கொண்டாட்டம்’ என்ற சொல்லுக்கு புது இலக்கணம் தரும் வகையில், இந்நிகழ்வுகளைக் கொண்டாடிய இயேசுவும், அவரது அன்னையும், சீடர்களும், நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றனர். கொண்டாட்டம் என்பது, பிறரது கவனத்தை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், நாம் கொண்டாடும் விழாவின் மையக்கருத்து, எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். அவ்விதம் அமையும் கொண்டாட்டங்கள், ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நமக்குள் மாற்றங்களை உருவாக்க வழி வகுக்கும். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள், முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்களை விதைத்ததால், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண முடிகிறது.

கொண்டாட்டங்களைப்பற்றிச் சிந்திக்கும் வேளையில், கொண்டாடமுடியாத சில நாட்களைப்பற்றியும் நாம் பேசியாகவேண்டும். அவற்றில் ஒன்று, ஜூன் 5, இத்திங்களன்று நாம் கொண்டாடவேண்டிய, ஆனால், கொண்டாடமுடியாமல் தவிக்கின்ற உலகச் சுற்றுச்சூழல் நாள்.

ஜூன் 1, கடந்த வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள், காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து தங்கள் நாடு விலகுவதாக அறிவித்துள்ளார். 2015ம் ஆண்டு, பாரிஸ் மாநகரில், 197 நாடுகள் ஒன்று கூடி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடிவெடுத்தன. அந்த முடிவிலிருந்து, தங்கள் அரசு விலகிக்கொள்வதாக டிரம்ப் அவர்கள் அறிவித்திருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ஜூன் 4, ஞாயிறன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவும், ஜூன் 5, திங்களன்று, உலகச் சுற்றுச்சூழல் நாளும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது. விவிலியத்தின் ஆரம்ப வரிகளில் தூய ஆவியார் நமக்கு அறிமுகமாகிறார். "நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொ.நூ. 1:2) என்று தொடக்க நூலில் வாசிக்கிறோம். படைப்பு அனைத்தின் ஊற்றாக, அடிப்படையாக விளங்கும் தூய ஆவியாரை, படைக்கப்பட்ட உலகிலிருந்து அகற்றிவிட்டு, இவ்வுலகையும், சுற்றுச்சூழலையும் நாம் உருவாக்கியதுபோல் மமதையுடன் நடந்துகொள்கிறோம். கட்டுக்கடங்காத நமது பேராசையால், நமது பூமியையும், நாம் வாழும் சூழலையும் காயப்படுத்தி வருகிறோம்.

உலகச் சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாட அதிகம் காரணங்கள் இல்லை. ஆனால், இந்த நாளைப்பற்றி பாடங்கள் பயில ஆயிரம் காரணங்கள் உள்ளன. பாடங்கள் பயிலவேண்டிய அவசியத்தை உலகம் இப்போது உணர்ந்துவருகிறது. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தை Severn Cullis-Suzuki என்ற 13 வயது சிறுமி, 25 ஆண்டுகளுக்குமுன், உலகத் தலைவர்களுக்குச் சொல்லித்தந்தார்.

1992ம் ஆண்டு, பிரேசில் நாட்டில் பூமிக்கோளத்தின் உச்சி மாநாடு (Earth Summit 1992) ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, 172 நாடுகளிலிருந்து, உயர்மட்டத் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களை, அதிர்ச்சியில், அமைதியில் ஆழ்த்தியது, அச்சிறுமி வழங்கிய 6 நிமிட உரை. இதோ Severn Suzukiயின் உரையிலிருந்து ஒரு சிலப் பகுதிகள்:

“நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று, உலகில் பட்டினியால் இறக்கும், ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும், உலகின் பல பகுதிகளில் அழிந்துவரும், உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் கேள்விப்படுகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது. நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப்பட்டீர்களா?”

இவ்விதம், தன் உரையை, சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, உலகத் தலைவர்களிடம் சில உண்மைகளை இடித்துரைத்தார். அன்று, அம்புகளாய், அவர்களை நோக்கிப் பாய்ந்த அவ்வுண்மைகள், இன்று, நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.

“நான் வாழும் இவ்வுலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

Severn Suzuki பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர், அச்சிறுமியை, ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், குற்ற உணர்வோடு, தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினார் அச்சிறுமி:

“நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.

நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்கமுடியும், நமது இயற்கையை காக்கமுடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:

மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;

மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;

நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;

மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;

எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...

என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”

இவ்வாறு, பாலர்பள்ளிப் பாடங்களை உலகத்தலைவர்களுக்குச் சொல்லித்தந்த சிறுமி Severn Suzuki, இறுதியாக, அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தார்.

“நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு நல்லவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எவ்வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.

பயந்து, கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளை, பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லி, குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்லமுடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்லமுடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள். இது நான் உங்கள் முன்வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவிமடுத்ததற்கு நன்றி.”

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, தலைவர்கள் அணிந்திருந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்தார், அச்சிறுமி. இது நடந்து இப்போது 25 ஆண்டுகள் கழிந்துவிட்டன. சிறுமி Severn Suzuki, அன்று இடித்துரைத்த உண்மைகள், இன்று, அச்சமூட்டும் வகையில் நம்மைச் சூழ்ந்து நெருக்குகின்றன. இந்தக் கேள்விக்கணைகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.

‘Connecting People to Nature’ - "மக்களை இயற்கையோடு இணைக்க" என்பது, இவ்வாண்டு, ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ள மையக்கருத்து. தூய ஆவியார் வருகைப் பெருவிழாவையும், உலகச் சுற்றுச்சூழல் நாளையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம், தூய ஆவியாரின் தூண்டுதலால், வழிநடத்துதலால், இயற்கையோடு இணைந்து வாழ, சுற்றுச்சூழலைப் பேணிக்காக்க, கற்றுக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.