2017-06-02 16:02:00

நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள்


ஜூன்,02,2017. இந்த உலகமாகிய நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு, திருப்பீட அவை ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க என்ற தலைப்பில், இரமதான் மாதத்திற்கும், அதன் இறுதியில் சிறப்பிக்கப்படும் ID Al-FITR விழாவுக்குமென செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை மையப்படுத்தி செய்தியை வெளியிட்டுள்ள இத்திருப்பீட அவை, இப்புவியின் வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைக்கப் போகிறோம் என்பதற்கு, புதியதொரு கலந்துரையாடலுக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் நெருக்கடி, நம் ஒவ்வொருவரிலும் ஆழமான மனமாற்றத்திற்கு விண்ணப்பிக்கின்றது எனவும், இந்நெருக்கடியை களைவதற்கு, கல்வி, வெளிப்படையான ஆன்மீகம் மற்றும், உலகளாவிய சுற்றுச்சூழல் மனமாற்றம் அவசியம் எனவும் திருத்தந்தை கூறியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளது, இத்திருப்பீட அவை.

நோன்பு, செபம், நற்பணிகள் ஆகியவை வழியாக வெளிப்படும் ஆன்மீக உள்தூண்டுதல்களும், ஆசீர்வாதங்களும், அமைதி மற்றும் நன்மைத்தனத்தின் பாதையில், மனிதக் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களையும், படைப்பனைத்தையும் பாதுகாப்பதற்கு நடத்திச் செல்ல, முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவுவதாக என்றும், அச்செய்தி தெரிவிக்கின்றது.

அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு மே 19ம் தேதி,  திருப்பீட பல்சமய உரையாடல் அவையை உருவாக்கிய பின், முஸ்லிம்களின் இவ்விழாவுக்கென 1967ம் ஆண்டில், முதன் முதலாக செய்தி வெளியிடப்பட்டதையும், இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது இத்திருப்பீட அவை.

இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.