2017-05-31 16:41:00

விளிம்பு மக்களுக்காக வாழும் திருத்தந்தை - கானடா பிரதமர்


மே,31,2017. சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக திருத்தந்தை தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்பதை, அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் தான் உணர்ந்ததாக, கானடா நாட்டுப் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மே 29, இத்திங்களன்று கானடா நாட்டுப் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, 36 நிமிடங்கள் உரையாடியபின், உரோம் நகரில் உள்ள வில்லா போர்கேசே பூங்காவில் செய்தியாளர்களிடம் தன் அனுபவங்களை,  பகிர்ந்துகொண்ட வேளையில் இவ்வாறு கூறினார் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

கானடா நாட்டில் வாழும் பழங்குடியினருடன், தங்கள் நாடு முழுமையான ஒப்புரவை அடைவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை பெரும் பங்கு வகிக்கமுடியும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தபோது, கானடா நாட்டு ஆயர்களுடனும், அரசுடனும் சேர்ந்து, அம்முயற்சிகளை எடுக்க, திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததாக பிரதமர் ட்ரூடோ அவர்கள் கூறினார்.

இந்த ஒப்புரவின் ஒரு முக்கிய முயற்சியாக, கத்தோலிக்கத் திருஅவை சார்பில் பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்பதற்கு திருஅவை முன்வரவேண்டும் என்பதையும், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதையும், திருத்தந்தையிடம் விண்ணப்பங்களாக முன்வைத்ததாக கானடா நாட்டுப் பிரதமர் கூறினார்.

கத்தோலிக்கரான கானடா பிரதமர் ட்ரூடோ அவர்களும், கானடா ஆயர்களும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு ஆகிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.