2017-05-31 16:44:00

உரோமையில் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்க பொன்விழா


மே,31,2017. கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 30,000த்திற்கும் அதிகமானோர், இவ்வியக்கத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட உரோம் நகரில் கூடியுள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

மே 31ம் தேதி இப்புதன் முதல், ஜூன் 4, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் வருகைப் பெருவிழா முடிய, இவ்வியக்கத்தினர், உரோம் நகரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

ஜூன் 3, சனிக்கிழமை நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாடு, ஜூன் 4, ஞாயிறு, பெருவிழா திருப்பலி ஆகிய நிகழ்வுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நடத்துகிறார்.

220 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில், எவஞ்செலிக்கல், பெந்தக்கோஸ்து சபைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 300 பேர் கலந்துகொள்கின்றனர் என்று இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த பொன்விழா நிகழ்வுகளில், 50 ஆயர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும், பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரெல் (Kevin Farrell) அவர்கள், வெள்ளிக்கிழமை திருப்பலியை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.