2017-05-30 15:19:00

சேதமாக்கப்பட்ட அன்னை மரி ஆலயத்தை புதுப்பிக்கும் முயற்சிகள்


மே,30,2017. தெலுங்கானாவில் பாத்திமா அன்னை ஆலயம் ஒன்று சில விஷமிகளால் தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதற்கு பரிகாரமாக, ஆன்மீக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார், அம்மாநிலத்தின் ஹைதராபாத் பேராயர்.

இம்மாதம் 21ம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் Keesaraவிலுள்ள, பாத்திமா அன்னை ஆலயத்திற்குள் நுழைந்த மத அடிப்படைவாதிகள், அங்குள்ள திரு உருவச்சிலைகளையும் ஏனைய பொருட்களையும் சேதமாக்கியுள்ளது பற்றி தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஹைதராபாத் பேராயர் தும்மா பாலா அவர்கள், ஜூன் மாதம் 9ம் தேதி பாத்திமா அன்னை கோவில் சுத்திகரிப்பு சடங்கு இடம்பெறுவதற்கு தெலுங்கானா மாநிலத்தின் அனைத்துக் கோவில்களிலும் ஒரு நாள் திருநற்கருணை ஆராதனையும், அதற்கு அடுத்த நாள் செபமாலை செபித்தலும் இடம்பெறும் என அறிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகளின் அனுமதி கேட்டு, தனியார் நிலத்தில், அவரின் விருப்பத்துடன் கட்டப்பட்ட அன்னை மரிக் கோவிலுக்குள் புகுந்த மத அடிப்படைவாதிகள், கோவிலின் உட்பகுதியை திட்டமிட்டே சேதப்படுத்தியுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.