2017-05-29 16:08:00

செபத்தில் பரிந்துரைப்பது, பிறரன்பு நடவடிக்கை


மே,29,2017. அனைத்தையும் இறைவனிடம் கொணர்ந்து அவரின் பாதுகாப்பில் ஒப்படைப்பதை நோக்கம் கொண்டுள்ளதால், செபம் என்ற பரிந்துரையானது,  அமைதியை அல்ல, மாறாக, பிறரன்பை உள்ளடக்கியதாக உள்ளது என இத்தாலியின் ஜெனோவா நகரில் இச்சனிக்கிழமை மாலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் விண்ணேற்பின் வழியாக விண்ணையும் மண்ணையும் இணைத்த இறைவன் இயேசு, நமக்காக சோர்வின்றி, தந்தையிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, அதேபோல் கிறிஸ்தவர்களும் மற்றவர்களுக்காக பரிந்து பேசுவதை செபத்தில் உள்ளடக்கும்போது, அது பிறரன்பு செயலாகிறது என்றார்.

ஜெனோவாவின் கென்னடி சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர் அந்நகரின் ஜியான்னினா கஸ்லினி மருத்துவ மனையில் சிறார்களை சந்தித்து அவர்களோடு உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு பணியாற்றுவோரிடமும், பிறரன்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்தரைத்தார்.

கடலை நோக்கியிருந்த கென்னடி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, நமக்காகப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கும் இயேசு, நாம் குறையுடையவர்களாக இருப்பினும் நம் மீது நம்பிக்கை வைத்து, அவர் பணியை தொடர்ந்து நடத்த நம்மை அனுப்பி வைக்கிறார் என்றார்.

இறைவனின் பலத்தில் நம்பிக்கை வைத்து, தூய ஆவியார் வழங்கும் வல்லமையின் துணைகொண்டு நாம் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை எடுத்துரைக்காமல் சோம்பித் திரிவது கிறிஸ்தவரால் இயலாது எனவும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.