2017-05-27 14:48:00

காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு திருத்தந்தை இரங்கல்


மே,27,2017. “இடர்களை எதிர்கொள்ளும் நேரங்களில் நாம் கடவுளை மறந்தாலும்கூட, அவர் நம்மோடு எப்போதும் துணை நிற்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், எகிப்தில், காப்டிக் வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள், பயங்கரவாதத் தாக்குதலில், கொல்லப்பட்டது குறித்து, தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, இக்கொலைகள், வெறுப்பின் அறிவற்ற செயல் என, தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த அனுதாபத்தை, தந்திச் செய்தியாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், எகிப்து அரசுத்தலைவர், Abdul Fattah al-Sisi அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து, ஏறக்குறைய, 140 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, புனித சாமுவேல் துறவு மடத்திற்கு, திருப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தை, துப்பாக்கிகளுடன் வந்த ஏறக்குறைய பத்து மனிதர்கள் சுட்டதில், குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், மற்றும், ஏறக்குறைய 23 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், சிறாரும்.

இப்பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும், காயமடைந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, எகிப்தில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு, தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எகிப்து இராணுவம், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களைத் தாக்கியுள்ளது என, எகிப்து அரசுத்தலைவர் Abdul Fattah al-Sisi அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.